Asia cup: நம்ப முடியாத அளவுக்கு பிரமாதமாக விளையாடி விட்டார்கள்.. ஓமன் வீரர்களை அழைத்து சூர்யகுமார் பாராட்டு
மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் போராடி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து ஓமன் அணி களம் இறங்கியது. ஓமன் அணி 50 ரன்கள் தாண்டுவதே கடினமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்கள் கடும் அதிர்ச்சி வைத்தியத்தை வழங்கினார்கள். ஒரு கட்டத்தில் ஓமன் அணி 19 பந்துகளில் வெற்றிக்கு தேவையான 40 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

கைவசம் ஒன்பது விக்கெட்டுகள் இருந்தது. இதனால் ஓமன் எளிதில் வெற்றி பெற்று விடும் என இந்திய ரசிகர்கள் பதற்றத்தில் இருந்தனர். ஆனால் அனுபவம் இன்மை காரணமாக ஒமன் அணி தோல்வியை தழுவியது. இதை அடுத்து போட்டி முடிவடைந்ததும் ஓமன் அணி வீரர்களை அழைத்த சூரியகுமார் யாதவ் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு வாழ்த்துக்களை கூறினார்.
இதனை அடுத்து போட்டி முடிவடைந்த உடன் பரிசளிக்கும் நிகழ்ச்சியில் பேசிய சூர்யகுமாரும், முதலில் நான் ஓமன் அணி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்கள் இன்று நம்ப முடியாத அளவுக்கு சிறந்த ஒரு கிரிக்கெட்டை விளையாடினார்கள். எனக்கு ஓமன் அணியின் பயிற்சியாளரை தனிப்பட்ட முறையில் தெரியும்.
எனவே அவர்கள் இன்று சிறப்பாக விளையாடுவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். அவர்களுடைய பேட்டிங்கை பார்க்கும்போது எனக்கு உண்மையிலே மகிழ்ச்சியை தந்தது. இன்று நான் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக பேட்டிங் செய்ய வரவில்லை. வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்து மற்ற வீரர்கள் விளையாடுவதை பார்க்கும் போது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும்.
ஆனால் இன்று கிடைத்த வாய்ப்பை ஹர்ஷித்ராணா, ஆர்ஸ்தீப் சிங்கும் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அணிக்கு எது சிறந்ததோ அந்த வகையில் அவர்கள் அபாரமாக பந்து வீசி இருக்கின்றார்கள். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். இன்று ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.ஆனால் அவரை போட்டியிலிருந்து நீங்கள் எப்போதும் தள்ளி வைக்க முடியாது. அவர் பந்து வீசிய விதம் கேட்ச் பிடித்த விதம் எப்போதுமே இந்திய அணிக்கு சிறப்பான விஷயமாக இருக்கும் என்று சூரிய குமார் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications