மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை ஓய்வு நாளாக இருந்த நிலையில் மீண்டும் செவ்வாய்க்கிழமையில் இருந்து போட்டிகள் நடைபெற உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் தற்போது செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் இலங்கையை எதிர்கொள்கிறது.
இலங்கை அணியும் சூப்பர் ஃபோர் சுற்றில் யாருமே எதிர்பார்க்காத வகையில் வங்கதேசத்திலும் வீழ்ந்தது. இதனால் செவ்வாய்க்கிழமை நடைபெறும் போட்டி கிட்டத்தட்ட நாக் அவுட் போல இருக்கும். இதில் தோற்கும் அணி தொடரை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த தருணத்தில் இந்தியா விளையாடும் அடுத்த சூப்பர் ஃபோர் சுற்று போட்டி எப்போது என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய அணி வரும் புதன்கிழமை வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இரவு 8 மணிக்கு இந்திய நேரப்படி துபாயில் நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இடத்தை பிடித்து விடும். அது மட்டுமில்லாமல் பைனலுக்கு செல்ல அதிக வாய்ப்பு ஏற்பட்டுவிடும். இதேபோன்று சூப்பர் ஃபோர் சுற்றில் இந்திய அணி தங்களுடைய கடைசி ஆட்டத்தை வெள்ளிக்கிழமை விளையாடுகிறது.
இதில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் தான் நடைபெற உள்ளது. இதிலும் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளனர். இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் செப்டம்பர் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற இருக்கின்றது.
சூப்பர் 4 சுற்றில் புள்ளி பட்டியலில் இந்திய அணி தற்போது இரண்டு புள்ளிகளுடன் முதல் இடத்திலும், வங்கதேச அணி 2 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவின் ரன் ரேட் 0.68 என்ற அளவிலும், வங்கதேசத்தின் ரன் ரேட் 0.12 என்ற அளவில் உள்ளது. இலங்கையின் ரன் ரேட் மைனஸ் 0.12 என்ற அளவில், பாகிஸ்தானின் ரன் ரேட் மைனஸ் 0.68 என்ற அளவிலும் உள்ளது. பாகிஸ்தான் அணி தற்போது ரன் ரேட்டில் மிகவும் பின்தங்கி இருப்பதால், செவ்வாய் அன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.