விரைவில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்?.. ஆசிய கோப்பை குறித்து வெளியான தகவல்.. எப்போது?
மும்பை: 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடாது எனச் சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால், தற்போது இதில் ஒரு பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2025 ஆசியக் கோப்பை திட்டமிட்டபடி வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் எனவும், அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் முதலில் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை நிர்வகித்து வரும் பி.சி.சி.ஐ. (BCCI) ஆல் நடத்தப்பட இருந்தது. இதற்கிடையேதான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மே மாதத்தில் போர் பதற்றம் நிலவியது. அதன் பிறகு, பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடக் கூடாது என்ற மனநிலை பரவலாக இருந்தது. சமூக வலைத்தளங்களில் பலரும் அதைச் சுட்டிக்காட்டி பதிவுகளை வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் தான், 2025 ஆசியக் கோப்பையை நடத்துவது குறித்து சில நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அப்போது அந்தத் தொடரை இந்தியாவில் நடத்துவதற்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இனி பொதுவான ஒரு இடத்தில் தான் விளையாட வேண்டும் எனவும், இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது, அதேபோல பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வராது எனவும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தது. அதன்படி பார்த்தால், 2025 ஆசியக் கோப்பையை இந்தியாவில் நடத்துவது சாத்தியமற்றது.
இதற்கிடையே, போர் பதற்றம் மற்றும் அதன் பின் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் விரிசலின் காரணமாகவும், 2025 ஆசியக் கோப்பையில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருவதில் பல சிக்கல்கள் இருந்தன. இந்த நிலையில் தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட ஆறு நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை நடத்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஆறு அணிகளும் இந்த முறை ஆசியக் கோப்பையில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம் பெறுமா அல்லது வெவ்வேறு குழுக்களில் இடம் பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏனெனில், முதல் சுற்றிலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடினால், அதன் பிறகு மீண்டும் அடுத்த சுற்றில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளுக்குத்தான் அதிக வருவாய் கிடைக்கும் என்பதால், இந்த இரு அணிகளும் எப்போதும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களின் முதல் சுற்றில் ஒரே குழுவில் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ.யிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. வரும் ஜூலை இரண்டாவது வாரத்தில் ஆசியக் கோப்பைக்கான அட்டவணையை அறிவிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் உள்ளது. அதற்கு முன்பு பி.சி.சி.ஐ. இது குறித்து விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications