சென்னை: 2025 ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில்லை டி20 அணிக்குள் கொண்டுவருவது குறித்த விவாதம் கிளம்பி உள்ளது.
முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழுத் தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். "சுப்மன் கில் திடீரென எங்கிருந்து வருகிறார்?" என்ற அவரது நேரடிக் கேள்வி, தேர்வாளர்களின் நிலைப்பாட்டையும், இந்திய டி20 அணியின் எதிர்காலத் திட்டமிடலையும் விவாதத்தின் மையத்திற்கு கொண்டு வந்துள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 754 ரன்கள் குவித்து, நான்கு சதங்களுடன் இந்திய டெஸ்ட் கேப்டனாக தனது பயணத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளார் சுப்மன் கில். இந்த அபாரமான ஃபார்ம், அவரை ஆசிய கோப்பை டி20 அணிக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற குரல்களை எழுப்பியுள்ளது. ஆனால், இந்த யோசனையை ஸ்ரீகாந்த் முற்றிலும் நிராகரிக்கிறார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "ஒருவேளை சுப்மன் கில் டி20 அணியின் கேப்டனாக இருந்திருந்தால், அவர் தானாகவே அணிக்குள் வந்திருப்பார். ஆனால், கில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் இல்லை. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. அப்படி இருக்கும்போது, அவர் திடீரென இப்போது எங்கிருந்து வருகிறார்?" என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சுப்மன் கில்லுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார் ஸ்ரீகாந்த். குறிப்பாக, 2025 ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அணிக்குள் கொண்டுவர வேண்டும் என அவர் அதிரடியாக கூறி இருக்கிறார்.
மேலும், அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக தங்களை நிரூபித்து, ஒரு அதிவேக ஆட்ட அணுகுமுறையை அணிக்குள் கொண்டு வந்துள்ளதாக ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் கூறி உள்ளனர்.
கௌதம் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்திய டி20 அணி ஒரு குறிப்பிட்ட ஆட்ட முறையைப் பின்பற்றி வருகிறது. இந்த சூழலில், ஏற்கெனவே சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களை நீக்கிவிட்டு, சுப்மன் கில்லை சேர்ப்பது அணியின் கட்டமைப்பைக் குலைக்கும் என்பது ஒரு வாதமாக உள்ளது.
மறுபுறம், சுப்மன் கில்லின் தேர்வுக்கு ஆதரவான வாதங்களும் வலுவாகவே உள்ளன. 2025 ஐபிஎல் சீசனில், அவர் 155.87 ஸ்ட்ரைக் ரேட்டில் 650 ரன்கள் குவித்துள்ளார். மேலும், ஒருநாள் போட்டிகளில் சுமார் 59 என்ற சராசரியுடன், இந்திய அணியின் முக்கியத் தூணாக விளங்குகிறார். அவரது கிளாசான ஆட்டத்திறனும், எந்த நேரத்திலும் ஆட்டத்தை மாற்றும் திறனும் அவரை எளிதில் புறக்கணிக்க முடியாத வீரராக மாற்றுகிறது.
தற்போது தேர்வாளர்கள் முன் ஒரு சிக்கலான நிலை உள்ளது. ஒருபுறம், டி20 உலகக் கோப்பையை வென்ற, தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களைக் கொண்ட ஒரு செட் ஆன அணி. மறுபுறம், டெஸ்ட் போட்டிகளில் ரன் மழை பொழிந்து, ஐபிஎல் தொடரிலும் தனது திறமையை நிரூபித்த, எதிர்கால சூப்பர் ஸ்டாராகக் கருதப்படும் சுப்மன் கில். இதில் எதற்கு தேர்வுக் குழு முக்கியத்துவம் அளிக்கும் என்று பார்க்கலாம்.