துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கும் இந்தியா, அதற்கு முன் சூப்பர் ஃபோர் சுற்றின் கடைசிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராகத் தேவையே இல்லாமல் தனக்குத்தானே ஒரு பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமே இந்திய அணியில் செய்யப்பட்ட மாற்றங்கள்தான். இதன் காரணமாகத்தான் நள்ளிரவு 12 மணிக்கு மேல் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. ஒரே நாளில் முடிய வேண்டிய போட்டி இரண்டாவது நாளாக நீட்டிக்கப்பட்டது.
இறுதிப் போட்டிக்கு முன் இந்திய வீரர்களுக்குப் போதிய ஓய்வு தேவை என்பதால் அணியில் மாற்றம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது., அதே சமயம், அணியில் மாற்றம் செய்யாமல், ஒரே பிளேயிங் லெவனுடன் தொடர்ந்து விளையாடினால் அது அணியில் புரிதலை அதிகரிக்கும், அது இறுதிப் போட்டிக்கு இன்னும் உதவியாக இருக்கும் எனச் சில முன்னாள் வீரர்கள் கூறி வந்தனர்.

ஆனாலும், இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் ஃபோர் போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் ஆல்-ரவுண்டர் சிவம் துபே நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் என இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களால்தான் இந்தப் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. ஆம், இவர்கள் இருவரும் ரன்களை வாரி இறைத்தனர். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் சேர்த்தது. துபாய் மைதானத்தில் இத்தனை அதிக ஸ்கோரை எடுத்ததால் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் எண்ணினர்.
ஆனால், பதிலுக்கு இலங்கை அணியும் அதிரடியைக் காட்டியது. முதல் பத்து ஓவர்களிலேயே 114 ரன்கள் எடுத்து மிரட்டியது. அந்த அணியின் துவக்க வீரர் பதும் நிசங்கா மிரட்டலாக ஆடினார். அவர் 58 பந்துகளில் 107 ரன்கள் சேர்த்தார். மறுபுறம் இந்திய அணியில் ஹர்ஷித் ராணா ரன்களை வாரி வழங்கினார். நான்கு ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார்.
அர்ஷ்தீப் சிங் முன்னணி டி20 பந்துவீச்சாளர் என்றாலும், தொடர்ந்து போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு இல்லாததால் அவரது திறனும் மங்கியது. அவர் நான்கு ஓவர்களில் 46 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். மற்றவர்கள் ஓரளவு கட்டுக்கோப்பாகப் பந்து வீசியபோதும், இந்த இரண்டு பந்துவீச்சாளர்களால் இந்திய அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் இலங்கை அணியும் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்றது. அப்போதே மணி நள்ளிரவு 12 தாண்டி இருந்தது. அதனால் நள்ளிரவு 12.30 அளவில் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
தான் செய்த தவறைத் தானே சரி செய்யும் வகையில் அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்காக சூப்பர் ஓவரை வீசினார். முதல் 20 ஓவர்களில் ரன்களை வாரி இறைத்து இருந்தாலும், சூப்பர் ஓவரில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். வெறும் இரண்டு ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து இலங்கை அணியின் 2 விக்கெட்டுகளையும் எடுத்தார். இதை அடுத்து, சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே சூர்யகுமார் யாதவ் மூன்று ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன் தேவையற்ற இந்த பதற்றத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. நல்ல வேளையாக இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டது. ஒருவேளை தோல்வி அடைந்து இருந்தால், அது நிச்சயம் வீரர்களின் மனநிலையைப் பாதித்து இருக்கும். நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி குரூப் சுற்றிலும், சூப்பர் ஃபோர் சுற்றிலும் தோல்வி அடையாத அணியாக இருந்தது.
இந்த நிலையில், இறுதிப் போட்டிக்கு முன் தோல்வி அடைந்திருந்தால் அது இந்திய வீரர்களின் மனதைப் பாதித்து இருக்கக்கூடும். பும்ரா மற்றும் சிவம் துபே உடன் கூடிய அதே அணியுடன் இந்தியா விளையாடி இருக்கலாம். அங்குதான் இந்திய அணி நிர்வாகம் தவறு செய்துவிட்டது. எது எப்படியோ, தற்போது இந்திய அணி தோல்வி அடையாத அணியாக இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஒரு இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது என்பது 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தான் நிகழ்ந்தது. அதன் பின் நடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வென்று இருந்தது. இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.