துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் போட்டி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' சம்பவத்திற்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவதால், செப்டம்பர் 14 அன்று நடைபெறவுள்ள இந்தப் போட்டியை இந்திய புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இது தற்போது 'இந்தியா vs டீம் இந்தியா' என்ற விவாதமாக மாறியுள்ளது. அதாவது இந்திய மக்கள், இந்திய கிரிக்கெட் அணியை ப[புறக்கணிக்க வேண்டும் என்ற கோணத்தில் மாறி உள்ளது. ரசிகர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) இந்திய அரசு அனுமதி வழங்கியதால், துபாயில் இந்தப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பல ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் முடிவு எதுவாக இருந்தாலும், கிரிக்கெட் வெல்கிறது, ஆனால் இந்தியா தோற்கிறது என்பதே அவர்களின் மனநிலையாக உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு நாட்டு ரசிகர்களும் இதை வெறும் போட்டியாகப் பார்க்காமல், கௌரவப் பிரச்சனையாகவே கருதுவார்கள். இந்தியாவின் பேட்டிங்கிற்கும், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சிற்கும் இடையே நடக்கும் யுத்தமாகவே இது பார்க்கப்படும். விராட் கோலியின் டி20 உலகக்கோப்பை 2022 நாக்-அவுட் ஆட்டம் ஆகட்டும், ஷஹீன் அஃப்ரிடியின் 2021 பந்துவீச்சு ஆகட்டும், இந்தப் போட்டிகள் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவுகளைத் தந்துள்ளன.
ஆனால், இந்த முறை கிரிக்கெட்டைத் தாண்டி, தேசப்பற்று சார்ந்த உணர்வுகள் முன்னுக்கு வந்துள்ளன. 'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவத்தின்போது, சில பாகிஸ்தான் வீரர்கள் நடந்து கொண்ட விதமே ரசிகர்களின் கோபத்திற்குக் முக்கியக் காரணம்.
பாகிஸ்தான் வீரர்களான அப்ரார் அகமது மற்றும் ஃபஹீம் அஷ்ரப் ஆகியோர் இந்திய ராணுவத்தையும், இந்தியாவையும் இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடியும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைக் கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது பற்றி, "ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் நமது ராணுவத்தை கேலி செய்த ஃபஹீம் அஷ்ரப், அப்ரார் அகமது போன்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுடனா நமது வீரர்கள் கிரிக்கெட் விளையாடப் போகிறார்கள்? பயங்கரவாதிகளுடன் கிரிக்கெட் விளையாடுவது எப்படி சரியாக இருக்கும்?" என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டையே தாங்கள் பின்பற்றுவோம் என பிசிசிஐ தெளிவாகக் கூறியுள்ளது. இதற்கு முன்னர், பாகிஸ்தானில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு செல்ல பிசிசிஐ மறுத்ததால், அந்தத் தொடர் ஹைப்ரிட் மாடலில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு தொடர்கள் எதுவும் நடைபெறாது என்றும் பிசிசிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் சைக்கியா கூறுகையில், "மத்திய அரசின் கொள்கைகளை நாங்கள் பின்பற்ற வேண்டும். பல நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை போன்ற தொடர்களில், இந்தியாவுடன் நட்புறவில் இல்லாத நாடுகளுக்கு எதிராக விளையாட மத்திய அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை. எனவே, ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் நாம் பங்கேற்றே ஆக வேண்டும். ஆனால், இருதரப்பு தொடர்கள் என்று வரும்போது, விரோத நாடுகளுடன் நாங்கள் விளையாட மாட்டோம்" என்றார்.
ஐபிஎல் தலைவர் அருண் துமாலும், "அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக இருதரப்பு தொடர்களில் விளையாட மாட்டோம், ஆனால் ஏசிசி/ஐசிசி தொடர்களில் விளையாடுவோம். அரசின் முடிவை நாங்கள் பின்பற்றுவோம்" என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசும், பிசிசிஐயும் பச்சைக்கொடி காட்டிவிட்டாலும், ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பைக் கைவிடுவதாக இல்லை. #BoycottAsiaCup மற்றும் #BoycottINDvsPAK போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. பிசிசிஐ, இந்தப் போட்டியின் மூலம் கிடைக்கும் வருவாய்க்காக ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கத் தவறிவிட்டது என்று பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த புறக்கணிப்புப் போராட்டம், இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் டிக்கெட் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிடும் டிக்கெட்டுகள், இந்த முறை இன்னும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
"நாடா? எதிரியுடன் கிரிக்கெட்டா? தேர்வு நம்முடையது" என்றும், "நீங்கள் இந்தப் போட்டியைப் பார்க்கும்போது, தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி இந்தியர்களையும், நமக்காக எல்லையில் உயிர் நீத்த வீரர்களையும் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். நான் ஆசிய கோப்பையை புறக்கணிக்கிறேன். நீங்கள்?" என்றும் ரசிகர்கள் தங்கள் உணர்வுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தத் தொடரில், செப்டம்பர் 14 அன்று மட்டுமல்லாமல், சூப்பர் 4 சுற்றில் செப்டம்பர் 21 அன்றும், இறுதிப் போட்டியில் செப்டம்பர் 28 அன்றும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்த சர்ச்சை ஆசியக் கோப்பை தொடர் முழுவதும் நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.