துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவரது போட்டிச் சம்பளத்தில் 30% அபராதம் விதித்துள்ளது. அவரது கருத்துகள், ஐசிசியின் நடத்தை விதிகளை மீறி, 'அரசியல் ரீதியாக' இருந்ததாகக் கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சை, செப்டம்பர் 14 ஆம் தேதி துபாயில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டிக்குப் பிறகு தொடங்கியது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் வீரர்களுடன் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமாரும், பிற இந்திய வீரர்களும் கை குலுக்காமல் தவிர்த்து இருந்தனர். பஹல்காம் தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கை குலுக்கவில்லை என கூறப்பட்டது.

அதன் பிறகு, போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில் பேசிய சூர்யகுமார், "இந்தச் சரியான தருணத்தில், பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். இந்த வெற்றியை, மிகுந்த துணிச்சலை வெளிப்படுத்திய நமது ராணுவப் படைகள் அனைவருக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறோம். அவர்கள் தொடர்ந்து எங்களுக்கு உத்வேகம் அளிப்பார்கள் என்று நம்புகிறோம். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், அவர்களது முகத்தில் புன்னகையை வரவழைக்க, களத்தில் நாங்கள் மேலும் பல காரணங்களைக் கொடுப்போம்" என்றார்.
சூர்யகுமாரின் இந்தக் கருத்துகள், கிரிக்கெட்டில் அரசியலைக் கலப்பதாக உள்ளது என்று கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், ஆசிய கோப்பைக்கான போட்டி நடுவரான ரிச்சி ரிச்சர்ட்சன், வியாழக்கிழமை (செப்டம்பர் 25) அன்று அதிகாரப்பூர்வ விசாரணையை நடத்தினார். இந்த விசாரணையில், சூர்யகுமார் யாதவ், பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ஹேமங் அமீன் மற்றும் இந்திய அணியின் கிரிக்கெட் செயல்பாட்டு மேலாளர் சுமீத் மல்லாபூர்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விசாரணையின்போது, சூர்யகுமார் யாதவ் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளாமல், 'குற்றமற்றவர்' (Not Guilty) என்று வாதிட்டதாக செய்தி வெளியானது. எனினும், அவரது கருத்துகள் ஐசிசியின் நிலை 1 (Level 1) நடத்தை விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்டு, அவருக்குப் போட்டிச் சம்பளத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல, சூப்பர் 4 சுற்றில் சைகைகள் மூலம் இந்திய அணியை சீண்டிய பாகிஸ்தான் வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.