ஐபிஎல்-லில் 600+ ரன்கள் அடித்தும் இந்திய அணியில் இடமில்லை.. ஸ்ரேயாஸ் ஐயரை ஓரங்கட்ட திட்டம்
மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2025 ஆசிய கோப்பை தொடருக்கான அணித் தேர்வில் ஸ்ரேயாஸ் ஐயர் புறக்கணிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
2025 ஐபிஎல் தொடரில் ரன் மழை பொழிந்து, பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயர், ஆசிய கோப்பைக்கான இந்திய டி20 அணியில் இடம் பெற மாட்டார் என்ற செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

சொதப்பலாக முடிந்ததா கனவு கம்பேக்?
சமீபத்தில் நடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரராகவும், 2025 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக 17 போட்டிகளில் 604 ரன்களை 175 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசியும் அசத்தினார் ஸ்ரேயாஸ் ஐயர்.
இதன் மூலம், சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணிக்கு அவர் திரும்புவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடமில்லை! காரணம் என்ன?
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு, ஆசிய கோப்பைக்கான அணியில் ஸ்ரேயாஸ் ஐயரைத் தேர்வு செய்ய விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குக் முக்கியக் காரணம், அணியின் தற்போதைய காம்பினேஷன்தான் என்று கூறப்படுகிறது.
இந்திய அணியின் மிடில் ஆர்டரில் திலக் வர்மா, ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்கள் ஏற்கனவே தங்கள் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அதே சமயம், டாப் ஆர்டரில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்குவது உறுதியாகிவிட்டதால், ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் சேர்ப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதனால், இவ்வளவு சிறப்பாக ஆடிய போதிலும், அணியின் நலன் கருதி அவர் ஒதுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அப்படியே தேர்வு செய்யப்பட்டாலும் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் அளிக்க முடியாத சூழலே நிலவும்.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் அதே நிலைதான்!
ஸ்ரேயாஸ் ஐயரைப் போலவே, டெஸ்ட் போட்டிகளில் கலக்கி வரும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் ஆசிய கோப்பை அணியில் இடமிருக்காது என்று கூறப்படுகிறது. அவரை முழுவதுமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துமாறு தேர்வுக்குழு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 19 ஆம் தேதி மும்பையில் 2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. அப்போது ஸ்ரேயாஸ் ஐயரின் எதிர்காலம் குறித்த இந்த அனைத்து கேள்விகளுக்கும் உறுதியான விடை தெரிந்துவிடும். ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை டி20 அணியில் அவரது இடம் உறுதி என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தத் தகவல் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications