துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் என்றாலே, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்காகத் தான் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருப்பார்கள். ஆனால், இம்முறை 2025 ஆசிய கோப்பை தொடர் தொடங்குவதற்கு சுமார் ஒரு மாதம் முன்பே பாகிஸ்தான் அணி, இந்தியாவை எதிர்கொள்ளப் போவதை நினைத்து பயந்துபோய், தீவிரப் பயிற்சிகளைத் தொடங்க உள்ளது.
சமீபத்தில் அடுத்தடுத்து சந்தித்த படுதோல்விகளால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது. சமீப காலமாக பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்து வருகிறது . அடுத்து ஆசிய கோப்பையில் இந்திய அணியிடமும் தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் விளாசி எடுத்து விடுவார்கள் என்பதால் இப்போதே பயிற்சியை தொடங்க உள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பிறகு ஒருமுறை கூட ஆசிய கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றதில்லை. இந்த நிலையில், சமீபத்தில் வங்கதேசம் போன்ற கத்துக்குட்டி அணியிடம் டி20 தொடரை இழந்து அவமானம் அடைந்தது. அதைவிட மோசமாக, முழு பலத்துடன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா போன்ற முக்கிய வீரர்கள் இருந்தும், பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் ஒருநாள் தொடரை இழந்து பெரும் அவமானத்தைச் சந்தித்தது.
இந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் அணி விளையாடிய 11 ஒருநாள் போட்டிகளில் வெறும் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடர் தோல்விகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சியில் உள்ளது.
இந்த அவமானகரமான தோல்விகளைத் தொடர்ந்து, 2025 ஆசிய கோப்பை தொடருக்காக தங்களைத் தயார்படுத்திக் கொள்ள, பாகிஸ்தான் அணி துபாயில் உள்ள ஐசிசி அகாடமிக்கு விரைந்துள்ளது. ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் அங்கு தீவிரப் பயிற்சி முகாம் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் சூழலுக்கு ஏற்ப வீரர்களைப் பழக்கப்படுத்துவதே இந்த முகாமின் முக்கிய நோக்கம்.
ஆசிய கோப்பைக்கு முன்னதாக, பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுடன் முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்கிறது. ஆகஸ்ட் 29-ம் தேதி ஷார்ஜாவில் தொடங்கும் இந்தத் தொடர், ஆசிய கோப்பைக்கான ஒரு வெள்ளோட்டமாகவே பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் சில இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 9-ம் தேதி துபாயில் தொடங்குகிறது. இதில் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் அனல் பறக்கும் போட்டி, செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணியுடன் ஒப்பிடும்போது, பாகிஸ்தான் அணிக்கு ஆசிய கோப்பைக்கு முன் 5 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. இந்தப் போட்டிகளின் மூலம் தங்களது தவறுகளை சரிசெய்து, இந்தியாவை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்பதே பாகிஸ்தான் அணியின் திட்டம். இருப்பினும், பாகிஸ்தான் அணியின் இந்த திடீர் தீவிரப் பயிற்சி, இந்திய அணியைக் கண்டு ஏற்பட்ட அச்சத்தின் வெளிப்பாடுதான் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கிண்டலாகக் கூறி வருகின்றனர்.