துபாய்: இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது திறமை வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர் என்றால் அது குல்தீப் யாதவ் தான். ரவி சாஸ்திரி இருந்த காலத்தில் குல்தீப் தான் சிறந்த ஸ்பின்னர் என்று அவர் பாராட்டுகிறார்.ஆனால் குல்தீப் யாதவ் தற்போது இந்திய அணியில் இடம் பிடிப்பதை சிரமமான காரியமாக மாறிவிட்டது.
இதற்கு காரணம் குல்தீப் ஒரு ஆல்ரவுண்டர் கிடையாது. பேட்டிங் பலத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக கௌதம் கம்பீர் தற்போது ஆல்ரவுண்டர்களுக்கு தான் முக்கியத்துவம் தருகின்றார். இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் குல்தீப், ஒரு ஆட்டத்தில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இது குறித்து குல்தீப் யாதவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் காட்டமாக பதில் அளித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "சில போட்டிகளை நாம் பார்க்கும் போது இந்த ஆட்டத்தில் நாம் விளையாடி இருக்கலாம் என்று தோன்றும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனக்கு வாய்ப்பு கிடைக்காது. இதற்கு காரணம் பேட்டிங்கை பலப்படுத்த வேண்டும் என்று அணி நிர்வாகம் நினைக்கின்றது."
"ஆனால் என்ன எதிர்பார்க்கிறோம் என்று அணி நிர்வாகம் எங்களிடம் தெளிவாக சொல்லிவிடும்.அதுதான் மிகவும் முக்கியம். பயிற்சியாளர் கம்பீர் எப்போதுமே முகத்துக்கு நேராக தனது கருத்தை தெரிவித்து விடுவார். சில சமயம் நான் விளையாடி இருக்கலாம் என்று எனக்குத் தோன்றும். ஆனால் பேட்டிங் காரணமாக தான் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. அது மட்டும் இல்லாமல் ஆடுகளத்தில் தன்மை மற்றும் கள சூழல் என அனைத்தையும் பார்த்து தான் வீரர்களை தேர்வு செய்வார்கள்."
"நான் என்னுடைய பேட்டிங்கை கவனம் செலுத்தலாம். ஆனால் பந்துவீச்சு என்பதுதான் என்னுடைய பலம். நான் எந்த அணியில் விளையாடினாலும், ஒரு பவுலராகத் தான் என்னை சேர்ப்பார்கள். ஏனென்றால் என்னுடைய பணி பந்து வீசுவது மட்டும்தான். என்னுடைய பணி விக்கெட் எடுப்பது மட்டும்தான். ஒரு வேலை நான் விக்கெட் எடுக்க இல்லையென்றால் எனக்கு அணியில் இடம் கிடையாது. நான் ஒரு அணியில் ஸ்பெசலிஸ்ட் பவுலராக இருக்கிறேன் என்றால் என்னுடைய பணி அது மட்டும் தான் பயிற்சி களத்தில் வேண்டுமானால் என்னுடைய திறமையை வளர்த்துக் கொள்ள முடியும்."
"அதை நான் கண்டிப்பாக செய்வேன். ஒவ்வொரு விஷயத்திற்கும் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதுதான் நான் கற்றுக் கொண்ட பாடம் மற்றதெல்லாம் என்ன நடக்கிறதோ அது கண்டிப்பாக நடக்கும். இங்கிலாந்து தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்காத போது என்னுடைய உடல் தகுதியையும், என்னுடைய கிரிக்கெட் திறனையும் வளர்த்துக் கொள்ள நிறைய நேரம் இருந்தது. ஒரு தொடரில் விளையாடவில்லை என்றால் நாம் கற்றுக்கொள்ள நிறைய நேரம் கிடைக்கும்."
"அணி எவ்வாறு விளையாடுகிறது என்று வெளியில் இருந்து நாம் பார்த்து கற்றுக் கொள்ள முடியும். இந்த இடத்தில் நாம் என்ன செய்திருக்கலாம் என்பது குறித்து யோசிக்கலாம். அவருடைய இடத்தில் நான் இருந்திருந்தால் என்ன செய்வேன் என்று யோசித்து நிறைய கற்றுக் கொண்டேன். இங்கிலாந்து தொடருக்கு பிறகு நான் துலீப் கோப்பையில் விளையாடினேன். அதில் 35 ஓவர்கள் வீசியும் எனக்கு விக்கெட் கிடைக்கவில்லை.ஆனால் நான் சரியான விதத்தில் பந்து வீசினேன். அந்த மன நிம்மதி எனக்கு கிடைத்தது. விக்கெட்டுகளை விட நாம் சரியான முறையில் வந்து வீசுகிறோமா என்பதுதான் மிகவும் முக்கியம்" என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.