மும்பை: ஆசியக் கோப்பைத் தொடரில் ரஷீத் கான் போன்ற அபாயகரமான பவுலர்களுக்கு எதிரான சஞ்சு சாம்சன் மிகச்சிறப்பாக செயல்படக் கூடிய வீரர் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் ஆதரவு தெரிவித்துள்ளார். ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் என்று இரு வகையான பவுலர்களையும் விளாசக் கூடியவராக சஞ்சு சாம்சன் இருப்பதாக கூறிய அவர், தென்னாப்பிரிக்கா மண்ணிலேயே தொடக்க வீரராக 2 சதங்களை சஞ்சு சாம்சன் அடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. இதனால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன. மீண்டும் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் அல்லது சுப்மன் கில் இருவரில் யாரை களமிறக்க வேண்டும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். சஞ்சு சாம்சன் அபாரமான ஃபார்மில் இருக்கும் நிலையில், சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதே ரசிகர்களின் குழப்பமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முகமது கைஃப் பேசுகையில், ஐபிஎல் தொடரில் டாப் 10 சிக்ஸ் ஹிட்டர்களில் சஞ்சு சாம்சனும் ஒருவர். அதன் காரணமாகவே ரஷீத் கானை சஞ்சு சாம்சனால் அட்டாக் செய்ய முடியும் என்று கூறுகிறேன்.
மிடில் ஓவர்களில் ரஷீத் கான் பவுலர்கள் செய்ய வந்தால், நிச்சயமாக சஞ்சு சாம்சனால் அட்டாக் செய்ய முடியும். தென்னாப்பிரிக்கா போன்ற பேட்டிங்கிற்கு கடினமான சூழல்களிலேயே, தொடக்க வீரராக களமிறங்கி 2 சதங்களை விளாசியவர் சஞ்சு சாம்சன். அவரால் ஸ்பின்னர்களையும், வேகப்பந்துவீச்சாளர்களையும் அட்டாக் செய்ய முடியும். அதேபோல் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் 400 முதல் 500 ரன்களை விளாசி வருகிறார்.
ஒருவேளை அபிஷேக் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தாலும் கூட, சஞ்சு சாம்சனை நம்பர் 3ல் களமிறக்கலாம். ஏனென்றால் திலக் வர்மா இன்னும் இளம் வீரராக இருக்கிறார். அவருக்கான வாய்ப்புகள் நிச்சயம் வரும். ஆனால் சஞ்சு சாம்சன் நல்ல அனுபவத்துடன் இருக்கிறார். இன்னும் 6 மாதங்களில் உலகக்கோப்பை நெருங்கும் போது, அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கருதுவதாக தெரிவித்துள்ளார்.