மும்பை: 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து, மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முதல் முறையாக தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். தான் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் டிராபியில் ஒரு போட்டியில் ஐந்து நாட்கள் விளையாடும் போது, தன்னால் ஆசிய கோப்பை டி20 தொடரில் விளையாட முடியாதா? என கேள்வி எழுப்பி உள்ளார் ஷமி.
தேர்வாளர்களின் முடிவு தனக்கு ஏமாற்றம் அளித்தாலும், அதற்காக யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்றும், வாய்ப்புக்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 19 அன்று பிசிசிஐ அறிவித்த 15 பேர் கொண்ட ஆசியக் கோப்பை அணியிலும், 5 பேர் கொண்ட மாற்று வீரர்கள் பட்டியலிலும் கூட முகமது ஷமியின் பெயர் இடம்பெறவில்லை. இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியவர் ஷமி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த 2025 சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் இவரே. இந்த நிலையில், தனது புறக்கணிப்பு குறித்து 'நியூஸ்24 ஸ்போர்ட்ஸ்' தளத்திற்கு பேட்டியளித்த முகமது ஷமி, "தேர்வு செய்யப்படாததற்காக நான் யாரையும் குறை கூறவோ, புகார் அளிக்கவோ மாட்டேன். அணிக்கு நான் சரியானவன் என்று நினைத்தால், அவர்கள் என்னை தேர்வு செய்வார்கள்; இல்லையென்றால், எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்திய அணிக்கு எது சிறந்ததோ அதைச் செய்வது தேர்வாளர்களின் பொறுப்பு" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "எனது திறமைகள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். நான் கடினமாக உழைத்து வருகிறேன். என்னால் துலீப் டிராபி போன்ற ஐந்து நாள் போட்டிகளில் விளையாட முடியும்போது, டி20 கிரிக்கெட்டில் ஏன் விளையாட முடியாது?" என்று மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஷமி, எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்திய அவர், ஓவருக்கு 11.23 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதனால் அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். இதுவே அவரது புறக்கணிப்புக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, உடல் தகுதி காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஷமி தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் தற்போது, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடத்தப்பட்ட உடற்தகுதித் தேர்வில் (பிரான்கோ டெஸ்ட்) தேர்ச்சி பெற்றுள்ளதாக ஷமி உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய ஷமி, "சர்வதேச அணிக்குத் திரும்புவது பற்றி தற்போது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அது தேர்வாளர்களின் கையில் உள்ளது. ஆனால் நான் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடத் தயாராக இருக்கிறேன்" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.