துபாய்; இந்தியாவுடனான 'கைகுலுக்கல் சர்ச்சை'யில் அடுத்தடுத்து அவமானங்களைச் சந்தித்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), தற்போது ஒரு போலி வீடியோவை வெளியிட்டு, அதைச் சில நிமிடங்களிலேயே நீக்கி, மீண்டும் ஒருமுறை தலைகுனிவைச் சந்தித்துள்ளது. ஐசிசி போட்டி ரெப்ரீ ஆண்டி பைக்ராஃப்ட், பாகிஸ்தான் கேப்டன் மற்றும் மேலாளரிடம் மன்னிப்பு கேட்டதாக பிசிபி ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டது, ஆனால் அதன் பின்னணியில் உள்ள உண்மை தற்போது அம்பலமாகியுள்ளது.
2025 ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி முடிவில் இந்திய அணி வீரர்கள் கைகுலுக்க மறுத்ததற்கு மேட்ச் ரெப்ரீ ஆன்டி பைகிராஃப்ட் தான் காரணம் என பாகிஸ்தான் அணி சார்பில் புகார் கூறப்பட்டு இருந்தது. மேலும், அவரை ஆசிய கோப்பையில் இருந்து நீக்கினால் தான் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்துடன் விளையாடும் என அந்த அணி நிர்வாகம் ஐசிசி-க்கு கடிதம் எழுதி இருந்தது.
இதை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டிக்கு முன் பாகிஸ்தான் அணி தாமதம் செய்தது. அந்தப் போட்டி தாமதமாகத் தொடங்கிய நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், "ஐசிசியின் சர்ச்சைக்குரிய போட்டி ரெப்ரீ ஆண்டி பைக்ராஃப்ட், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளர் மற்றும் கேப்டனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்."

"இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது இரு அணி கேப்டன்களும் கைகுலுக்கக் கூடாது என்று ஆண்டி பைக்ராஃப்ட் தடை விதித்திருந்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தச் செயலுக்குக் கடுமையாக எதிர்வினையாற்றியது. செப்டம்பர் 14 அன்று நடந்த சம்பவம் ஒரு 'தவறான தகவல் தொடர்பால்' ஏற்பட்ட தவறு என்று கூறி ஆண்டி பைக்ராஃப்ட் மன்னிப்பு கோரினார்" என்று கூறப்பட்டிருந்தது.
தங்கள் கூற்றை நிரூபிக்க, ஒரு வீடியோ கிளிப்பையும் பிசிபி வெளியிட்டது. அதில், போட்டி ரெப்ரீ பைக்ராஃப்ட் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவிடம் மன்னிப்பு கேட்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்த வீடியோவில் அவர்கள் பேசிக் கொள்ளும் சத்தம் கேட்கவில்லை. அதில் என்ன இருந்தது என்று ரசிகர்கள் பார்ப்பதற்குள், அதை அவசர அவசரமாக நீக்கியதுதான் இந்த நாடகத்தின் உச்சக்கட்டம். ஒருவேளை ரெப்ரீ உண்மையிலேயே மன்னிப்பு கேட்டிருந்தால், அந்த வீடியோவை ஏன் நீக்க வேண்டும் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியது.
இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள உண்மை தற்போது அம்பலமாகியுள்ளது. செய்தி நிறுவனமான பிடிஐ வெளியிட்டுள்ள தகவலின்படி, ஐசிசி வட்டாரங்கள் இந்தச் சம்பவத்திற்கு வேறு ஒரு விளக்கத்தையே அளித்துள்ளன.
போட்டி ரெப்ரீ, கைகுலுக்கலைத் தவிர்த்ததற்காக மன்னிப்பு கேட்கவில்லை; மாறாக, டாஸுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட 'தவறான தகவல் தொடர்புக்காகவே' வருத்தம் தெரிவித்ததாக ஐசிசி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், "பைக்ராஃப்டின் தவறு என்ன என்பதற்கு பிசிபி மேலும் ஆதாரங்களை வழங்கினால் மட்டுமே ஐசிசி தனது விசாரணையை நடத்தும்" என்றும் கூறியுள்ளது ஐசிசி.
முன்னதாக, ஐசிசி இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்குக் கடுமையான பதிலடி கொடுத்திருந்தது. "உங்கள் பிரச்சினை இந்திய வீரர்கள் கைகுலுக்காதது என்றால், அந்த முடிவை எடுத்தவர்களிடம் புகார் தெரிவியுங்கள். அதை விடுத்து, ரெப்ரீ மீது பழிபோடாதீர்கள்" என்று ஐசிசி கூறியிருந்தது.
தொடரிலிருந்து விலகுவோம் என்ற மிரட்டல் பலிக்காததால், ஒரு தர்மசங்கடமான சூழலில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஒரு சிறிய வருத்தத்தை, 'மன்னிப்பாக' சித்தரித்து, ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றது போலக் காட்ட முயன்றது. ஆனால், போலி வீடியோவை வெளியிட்ட வேகத்திலேயே அதை நீக்கியதன் மூலம், அவர்கள் மீண்டும் ஒருமுறை தங்களின் நம்பகத்தன்மையை இழந்து, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நகைப்புக்குரிய இடத்தைப் பிடித்துள்ளனர்.