Asia Cup: சஞ்சு சாம்சனின் உலகமகா டக் அவுட் ரெக்கார்டை சமன் செய்த பாகிஸ்தான் வீரர் சயிம் அயூப்
துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான சயிம் அயூப், ஒரு மோசமான சாதனையை செய்துள்ளார். புதன்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) எதிராக நடந்த போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம், இந்த ஆசிய கோப்பையில் தொடர்ச்சியாக தனது மூன்றாவது டக் அவுட்டைப் பதிவு செய்து, பாகிஸ்தான் அணிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் எதிர்கால நட்சத்திரமாகப் பார்க்கப்பட்ட சயிம் அயூப்பின் ஆட்டம், இந்த ஆசிய கோப்பையில் படுமோசமாக அமைந்துள்ளது. சமீப காலமாக அவரை விராட் கோலியுடனும், பாபர் அசாமுடனும் ஒப்பிட்டு பேசி வந்தனர் பாகிஸ்தான் ரசிகர்கள். ஆனால், அவரோ டக் அவுட் ஆவதில் புதிய சாதனையை செய்து இருக்கிறார்.

2025 ஆசிய கோப்பை தொடரில் சயிம் அயூப் ஓமனுக்கு எதிராக முதல் பந்திலேயே டக் அவுட் (கோல்டன் டக்) ஆனார். அடுத்து இந்தியாவுக்கு எதிராக ஹர்திக் பாண்டியா வீசிய போட்டியின் முதல் பந்திலேயே டக் அவுட் (கோல்டன் டக்). ஆனார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக இரண்டு பந்துகளைச் சந்தித்து டக் அவுட் ஆனார்.
இது, கடந்த ஆறு சர்வதேச டி20 போட்டிகளில் அவரது நான்காவது டக் அவுட் ஆகும். இந்தத் தொடர்ச்சியான சொதப்பல், பாகிஸ்தானின் தொடக்க ஆட்டத்தை மிகவும் பலவீனமாக்கியுள்ளது.
சயிம் அயூப் செய்த மெகா டக் அவுட் ரெக்கார்டுகள்
தொடர்ச்சியாக மூன்று முறை டக் அவுட் ஆன தொடக்க ஆட்டக்காரர்கள் (முழு உறுப்பினர் அணிகள்):
இந்த மோசமான சாதனை பட்டியலில், ஆண்ட்ரே பிளெட்சர் மற்றும் முகமது ஹஃபீஸ் ஆகியோருடன் சயிம் அயூப் இணைந்துள்ளார்.
- ஆண்ட்ரே பிளெட்சர் (மேற்கிந்தியத் தீவுகள்) - 2009
- முகமது ஹஃபீஸ் (பாகிஸ்தான்) - 2012
- சயிம் அயூப் (பாகிஸ்தான்) - 2025
ஒரே ஆண்டில் அதிக டி20 டக் அவுட்கள்:
இந்த ஆண்டில், சயிம் அயூப் தனது 5வது டி20 டக் அவுட்டைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம், இந்திய வீரர் சஞ்சு சாம்சன்னின் மோசமான சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
- ரிச்சர்ட் என்காரவா (ஜிம்பாப்வே) - 6 டக் அவுட்கள் (2024)
- பிளெஸ்சிங் முசரபானி (ஜிம்பாப்வே) - 5 டக் அவுட்கள் (2024)
- ரெஜிஸ் சகப்வா (ஜிம்பாப்வே) - 5 டக் அவுட்கள் (2022)
- சஞ்சு சாம்சன் (இந்தியா) - 5 டக் அவுட்கள் (2024)
- சயிம் அயூப் (பாகிஸ்தான்) - 5 டக் அவுட்கள் (2025)
- ஹசன் நவாஸ் (பாகிஸ்தான்) - 5 டக் அவுட்கள் (2025)
பாகிஸ்தான் வீரர்களில் அதிக தொடர்ச்சியான டக் அவுட்கள்:
டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக முறை டக் அவுட் ஆன பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில், அப்துல்லா ஷஃபீக்கிற்கு (4 முறை) அடுத்தபடியாக சயிம் அயூப் (3 முறை) உள்ளார்.
தனது 44வது டி20 போட்டியில் விளையாடும் சயிம் அயூப், இதுவரை 8 முறை டக் அவுட் ஆகியுள்ளார். அவரது சராசரி 20.40 ஆகக் குறைந்துள்ளது. பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், அணியின் முக்கிய தொடக்க ஆட்டக்காரர் இப்படி ஒரு மோசமான ஃபார்மில் இருப்பது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தொடர் சொதப்பல், அணியில் அவரது இடத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications