துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ள நிலையில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுஃபிடம் இந்திய அணியை சீண்டும் வகையில் பேசும் ஒரு வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற பிறகு, ஹாரிஸ் ரவுஃப் ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது, ஒரு பாகிஸ்தான் ஆதரவாளர், ஹாரிஸ் ரவுஃபுக்குக் கைகுடுத்து, "இந்தியாவை விட்டுவிடாதீர்கள்" என்று கூறினார். இந்த வார்த்தைகள், வெறும் ஆதரவு மனப்பான்மையைத் தாண்டி, ஆத்திரமூட்டும் வகையிலும், அவமரியாதையான தொனியிலும் இருப்பதாக இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வரும் செப்டம்பர் 28 அன்று நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக, இந்த வீடியோ இருதரப்பு ரசிகர்களிடையேயும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த வீடியோ, ஏற்கனவே இந்தத் தொடரில் நிலவி வரும் சர்ச்சைகளின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் நடந்த இரண்டு இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்குப் பிறகும், இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.
ஹாரிஸ் ரவுஃப், '6-0' மற்றும் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது போன்ற சைகைகளைச் செய்து விமர்சனத்துக்கு உள்ளானார். சாஹிப்சாதா ஃபர்ஹான், தனது பேட்டைத் துப்பாக்கி போல பாவித்துச் சுட்டது, கிரிக்கெட்டை ஒரு அரசியல் களமாக மாற்றியது. இப்போது, வீரர்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் ரசிகர்களும் இதேபோன்ற விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துவது, இந்திய ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா, "எந்த அணியையும் வீழ்த்தும் அளவிற்கு எங்கள் அணி பலமாக உள்ளது" என்று இந்தியாவை எச்சரிக்கும் வகையில் பேசி இருந்தார். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் 135 ரன்கள் மட்டுமே எடுத்துத் தடுமாறினாலும், ஷஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் தலைமையிலான பந்துவீச்சுப் படை, அந்த குறைந்த ஸ்கோரை வைத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கொடுத்தது. இது அந்த அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
இந்திய அணி, இன்று இலங்கைக்கு எதிரான கடைசி சூப்பர் 4 போட்டியில் மோத உள்ளது. இதை அடுத்து செப்டம்பர் 28 அன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. இதற்கிடையே ஐசிசி-யிடம் பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு மாற்றி, மாற்றி புகார் அளித்துள்ளன. அதன் மீதான விசாரணை முடிவு இறுதிப் போட்டிக்கு முன் அறிவிக்கப்பட உள்ளது.