அபுதாபி: 2025 ஆசிய கோப்பை தொடரில் நேற்று (செப்டம்பர் 13) அபுதாபியில் நடந்த போட்டியில், இலங்கை அணி வங்கதேசத்தை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் 'குரூப் பி' புள்ளிப் பட்டியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், 'குரூப் ஏ' வில் இந்திய அணி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து, சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியை 148 ரன்களுக்குச் சுருட்டிய இலங்கை, பின்னர் அந்த இலக்கை எளிதாக எட்டிப் பிடித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே சமயம், தனது இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்த வங்கதேசம், மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, தொடரிலிருந்து வெளியேறும் அபாயத்தில் உள்ளது.

1 - ஆப்கானிஸ்தான்: 1 போட்டியில் 1 வெற்றியுடன் 2 புள்ளிகள் (+4.700 NRR) பெற்று முதலிடத்தில் உள்ளது.
2 - இலங்கை: 1 போட்டியில் 1 வெற்றியுடன் 2 புள்ளிகள் (+1.550 NRR) பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
3 - வங்கதேசம்: 2 போட்டிகளில் 1 வெற்றி, 1 தோல்வியுடன் 2 புள்ளிகள் (-0.850 NRR) பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
4 - ஹாங்காங்: 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
இந்தக் குழுவிலிருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
குரூப் ஏ-வைப் பொறுத்தவரை, இந்திய அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி, +10.483 என்ற இமாலய நெட் ரன் ரேட்டுடன் முதலிடத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது. பாகிஸ்தான் அணி ஓமனை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளது.
1 - இந்தியா: 1 போட்டியில் 1 வெற்றியுடன் 2 புள்ளிகள் (+10.483 NRR).
2 - பாகிஸ்தான்: 1 போட்டியில் 1 வெற்றியுடன் 2 புள்ளிகள் (+4.650 NRR).
3 - ஓமன்: 1 போட்டியில் 1 தோல்வியுடன் 0 புள்ளிகள்.
4 - ஐக்கிய அரபு அமீரகம்: 1 போட்டியில் 1 தோல்வியுடன் 0 புள்ளிகள்.
பாகிஸ்தானை வீழ்த்தினால்: இன்று (செப்டம்பர் 14) நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், 4 புள்ளிகளுடன் குரூப் ஏ-வில் முதலிடத்தைப் பிடித்து, வேறு எந்த போட்டியின் முடிவையும் சாராமல் நேரடியாக சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறும்.
பாகிஸ்தானிடம் தோற்றால்: ஒருவேளை பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தாலும், இந்தியாவின் சூப்பர் 4 வாய்ப்பு பாதிக்கப்படாது. காரணம், இந்தியாவின் நெட் ரன் ரேட் மிக அதிகமாக உள்ளது. தனது கடைசி லீக் போட்டியில், செப்டம்பர் 19 அன்று ஓமன் அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலே இந்தியா எளிதாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிடும்.
மொத்தத்தில், இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது என்றே கூறலாம். இன்றைய பாகிஸ்தான் போட்டி, முதலிடத்தைப் பிடிப்பது யார் என்பதை மட்டுமே தீர்மானிக்கும் போட்டியாக அமைந்துள்ளது.