“வெறும் பேட்டிங் செய்தால் இந்திய அணியில் இடம் கிடைக்காது அதனால்”.. ரிங்கு சிங் அதிரடி முடிவு
மும்பை: "ஃபினிஷர்" என்று பட்டப்பெயருடன் இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி காட்டி வரும் ரிங்கு சிங், இந்திய டி20 அணியில் நிரந்தர இடமின்றி தவித்து வருகிறார். 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் மாற்று வீரராக மட்டுமே இருந்த அவர் அடுத்து நடைபெற்ற சில டி20 போட்டிகளிலும் பிளேயிங் லெவனில் வருவதும் போவதுமாக இருந்தார். இந்த நிலையில், 2025 ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
இனி பேட்டிங் மட்டும் செய்தால் இந்திய அணியில் இடம் கிடைக்காது என்ற முடிவில் இருக்கும் ரிங்கு சிங், தற்போது தனது பந்துவீச்சு திறமையையும் மெருகேற்றி ஒரு முழுமையான ஆல்-ரவுண்டராக மாற முயற்சி செய்து வருகிறார்.

கடந்த 2024 டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்காதது, தனக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்பித்ததாகவும், அணியில் நீடிக்க பல திறமைகள் அவசியம் என்பதை உணர்த்தியதாகவும் அவர் மனம் திறந்துள்ளார்.
ஆல் - ரவுண்டர் திட்டம்
2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ரிங்கு சிங், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது இந்த புதிய முயற்சி குறித்துப் பேசினார். "கடந்த உலகக் கோப்பை அணியில், அணி சேர்க்கை (Team Combination) காரணமாக எனக்கு இடம் கிடைக்கவில்லை. தேர்வுக்குழுவினர் அதிக பந்துவீச்சு வாய்ப்புகளை, ஆல் - ரவுண்டர்களை விரும்பினார்கள். நான் அப்போது அதிகம் பந்துவீசாததால், அந்த வாய்ப்பை இழந்தேன். அது என்னை தீவிரமாக சிந்திக்க வைத்தது" என்று ரிங்கு சிங் கூறினார்.
அந்தத் தவறு மீண்டும் நிகழக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ரிங்கு சிங், தனது பகுதிநேர பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். "நான் தொடர்ந்து பந்துவீசுவதற்கு முயற்சி செய்கிறேன். ஒரு போட்டியில் இரண்டோ, மூன்றோ ஓவர்கள் வீச முடிந்தால் கூட, அது அணிக்கு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். இது எனது ஆட்டத்தில் மேலும் ஒரு திறமையைச் சேர்க்கும். அணிக்குத் தேவைப்படும்போது உதவும்" என்று அவர் கூறினார்.
சமீபத்தில் உத்திரப் பிரதேசம் டி20 லீக் (UPT20) தொடரில் மீரட் மேவரிக்ஸ் அணிக்காக விளையாடிய ரிங்கு சிங், பந்துவீசி விக்கெட் வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இது அவரது ஆல்-ரவுண்டர் அடையாளத்துக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.
சூர்யா பாய் தந்த வாய்ப்பு
முன்னதாக இலங்கைச் சுற்றுப்பயணத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தையும் ரிங்கு சிங் நினைவுகூர்ந்தார். "இலங்கையில், சூர்யா பாய் (சூர்யகுமார் யாதவ்) என்னை பந்து வீசச் சொன்னார். எனக்கு அழுத்தம் இருந்தது, ஆனால் சமாளித்து பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினேன். அது எனக்கு அதிக நம்பிக்கையைக் கொடுத்தது. எனது பந்துவீச்சும் அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அது எனக்குக் காட்டியது" என்றார்.
"பேட்டிங் எப்போதும் எனது பலமாக இருந்து வருகிறது, ஆனால் இப்போது கேப்டனுக்குத் தேவைப்படும் போதெல்லாம் பந்து மூலமாகவும் அணிக்கு உதவ விரும்புகிறேன்," என்று ரிங்கு சிங் நம்பிக்கையுடன் தெரிவித்தார். ரிங்கு சிங்கின் இந்த புதிய முயற்சி, ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்குக் கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் அதிரடி காட்டும் அவர், பந்துவீச்சிலும் ஜொலித்தால், இந்திய அணியின் ஒரு தவிர்க்க முடியாத வீரராக உருவெடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications