துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்காதது பல்வேறு விவாதங்களை ஏற்கனவே ஏற்படுத்தியது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் அணியின் சேர்க்கப்பட்டதால் தொடக்க வீரராக அதிரடியாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் நடுவரிசைக்கு தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி ஒரு விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் சாம்சன் வாய்ப்பு தரப்படவில்லை. அதேபோன்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சாம்சன் ஐந்தாவது வீரராக களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த ஆட்டத்திலும் திடீரென்று சிவம் துபே பேட்டிங் செய்ய வந்ததால் சாம்சனுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இது தற்போது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சஞ்சு சாம்சனை வேண்டுமென்றே அணி நிர்வாகம் ஒதுக்குகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது களத்தில் சூரிய குமார் இருந்ததால் வலது கை இடது கை பேட்ஸ்மேன் களத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக சிவம் துபேவை முன்கூட்டியே அனுப்பியதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் நம்பர் ஒன் இடத்தில் இருந்த சஞ்சு சாம்சன் நம்பர் ஐந்தாவது இடத்திற்கு கூட வரவில்லையே என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனால், வரும் வெள்ளிக்கிழமை ஓமன் அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து சஞ்சு சாம்சனுக்கு நடுவரிசையில் களமிறங்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் சிலர் சாம்சன் தனக்கு நம்பர் மூன்றாம் இடத்தில் களமிறங்க வாய்ப்பு கொடுங்கள் என்று தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சாம்சனுக்கு கடைசி லீக் ஆட்டத்தில் ப்ரோமோஷன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வெளிப்படுத்தும் விதமாக சஞ்சு சாம்சன் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.