துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் படுமோசமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, அணித் தேர்வாளர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார். "இப்படிப்பட்ட தரத்தில்தான் கிரிக்கெட் ஆட வேண்டும் என்றால், அணியிலிருந்து நீக்கப்பட்ட பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரையே அணியில் வைத்திருக்கலாமே" என்று அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் எதிர்கொள்ளவுள்ள நிலையில், இந்தத் தொடரில் ஏற்கனவே இரண்டு முறை இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளது. இறுதிப் போட்டியிலும் இதே கதைதான் தொடரும் என்று பலரும் கணித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து அஃப்ரிடி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

கராச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், "ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி, பாபர் மற்றும் ரிஸ்வானை இல்லாததை உணர்ந்ததா?" என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, அஃப்ரிடி பதிலளித்தார்.
"பாகிஸ்தான் அணி இந்தத் தொடரில் பேட்டிங் செய்த விதத்தைப் பார்க்கும்போது, பாபரும் ரிஸ்வானும் அணியில் இருந்திருக்க வேண்டும். 'இப்படித்தான் விளையாட வேண்டும் என்றால், பாபரும் இருந்திருக்க வேண்டும், ரிஸ்வானும் இருந்திருக்க வேண்டும். அவர்கள் அணியில் இருக்கும்போது, அவர்களைச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள், இதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பிரச்சனை" என்று அஃப்ரிடி கூறினார்.
கடந்த ஆண்டு முதல் டி20 போட்டிகளில் குறைந்த ஸ்டிரைக் ரேட்டில் ரன் குவித்தார்கள் என்ற காரணத்திற்காகவே, பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் அணியிலிருந்து நீக்கப்பட்டனர். ஆனால், தற்போதுள்ள பேட்ஸ்மேன்களும் அதேபோன்ற குறைந்த ஸ்கோர்களையே எடுத்து, பவுண்டரிகள் அடிக்கத் திணறுவதை அஃப்ரிடி தனது பேச்சில் சுட்டிக்காட்டினார்.
மேலும் பேசிய அஃப்ரிடி, இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா இந்தத் தொடரில் ஆடவில்லையே என தான் உணர்ந்ததாகவும் குறிப்பிட்டார். "நான் நசீம் ஷாவை மிகவும் மிஸ் செய்தேன். துபாய் ஆடுகளங்களின் தன்மையைப் பார்க்கும்போது, ஷஹீன் அப்ரிடியுடன் நசீம் ஷா இணைந்திருந்தால், அது ஒரு அசாதாரண கூட்டணியாக இருந்திருக்கும். தற்போது அணி விளையாடும் விதம், அதன் தரத்திற்கு ஏற்றதாக இல்லை. நீங்கள் இலங்கை, ஓமன் போன்ற அணிகளை வீழ்த்திவிடலாம். ஆனால், இந்திய அணிக்கு எதிரான ஒரு இறுதிப் போட்டியில், பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என மூன்று துறைகளிலுமே நீங்கள் உச்சபட்ச திறமையை வெளிப்படுத்த வேண்டும்" என்று அஃப்ரிடி அறிவுரை வழங்கினார்.
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி 135 ரன்கள் என்ற குறைந்த ஸ்கோரை வைத்தே வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. பந்துவீச்சாளர்களின் இந்த அபாரமான செயல்பாட்டால்தான் பாகிஸ்தான் அணி, ஆசிய கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதுவதை உறுதி செய்துள்ளது.