துபாய்: 2025 ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய திட்டம் ஒன்றை பத்திரிக்கையாளர் சந்திப்பில் போட்டு உடைத்து இருக்கிறார் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல். சிவம் துபேவை வைத்து இந்திய அணியின் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு இருக்கிறது. அதை தான் அவர் பொதுவெளியில் கூறி இருக்கிறார்.
தற்போது நடைபெற உள்ள ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லும் அணிகளில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. உலகின் சிறந்த டி20 அணிகளில் ஒன்றாகத் திகழ்ந்தாலும், இந்திய அணியின் ஆடும் லெவனில் சில இடங்கள் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சிறந்த பந்துவீச்சு படையுடன் களமிறங்குவதா அல்லது பேட்டிங் வரிசையை 8-வது இடம் வரை நீட்டிப்பதா என்ற குழப்பம் நீடிக்கிறது. இந்த விவாதத்தின் மையப்புள்ளியாக இருப்பவர் ஆல்-ரவுண்டர் சிவம் துபே.

பேட்டிங் வரிசைக்கு ஆழம் சேர்க்க கேப்டன் சூர்யகுமார் யாதவ் விரும்பினால், சிவம் துபே நிச்சயம் ஆடும் லெவனில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், சிவம் துபே குறித்து தெரிவித்த கருத்து, அணியின் ரகசியத் திட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.
ஒரு முழுமையான பந்துவீச்சாளருக்குப் பதிலாக சிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டால், இந்தியாவின் பேட்டிங் வரிசை 8-வது இடம் வரை நீளும். இது, அதிரடியாக விளையாட விரும்பும் பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் சுதந்திரத்தை அளிக்கும். சுழற்பந்து வீச்சைத் திறம்பட எதிர்கொள்ளும் வீரராக அறியப்படும் சிவம் துபே, அணியின் ஆறாவது பந்துவீச்சு தேர்வாக செயல்பட்டால், அவரது முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும்.
இதற்காக, இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், சிவம் துபேவுடன் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். டி20 போட்டிகளில் துபேவை நான்கு ஓவர்கள் வீசும் பந்துவீச்சாளராக உருவாக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் செய்தியாளர்களிடம் பேசிய மோர்கல், "சிவமை நான்கு ஓவர்கள் வீசக்கூடிய ஒருவராகப் பயன்படுத்துவது எனக்கு எப்போதும் முக்கியம். ஆல்-ரவுண்டர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் கடினமாக உழைக்க வேண்டும் என்று நான் எப்போதும் வலியுறுத்துகிறேன். சில நேரங்களில் வீரர்கள் பயிற்சியில் ஏதேனும் ஒன்றில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். ஆனால், இங்கு நாங்கள் எந்த ஒரு வாய்ப்பையும் நழுவவிட விரும்பவில்லை. போட்டி நாளன்று, ஆடுகளத்தின் தன்மை மற்றவர்களை விட அவருக்குச் சாதகமாக இருக்கலாம், அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள அவர் தயாராக இருக்க வேண்டும்" என்றும் மோர்கல் குறிப்பிட்டார்.
மோர்கலின் இந்த கருத்து, பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி, சிவம் துபேவை ஆடும் லெவனில் சேர்க்க ஆவலுடன் இருப்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது. கடந்த கால டி20 போட்டிகளில், இந்திய அணி பேட்டிங் வரிசையை நீட்டிப்பதிலும், பல்துறை வீரர்களை அணியில் சேர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டியுள்ளது. துபாயில் ஆடுகளங்கள் மெதுவாக மாறும் பட்சத்தில், துபேயின் மிதவேகப்பந்து வீச்சு அணிக்குக் கைகொடுக்கும்.
இருப்பினும், துபேவை அணியில் சேர்ப்பது, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் இடத்தைக் கேள்விக்குறியாக்கும். இந்திய அணி நிர்வாகம் ஒரு கூடுதல் பேட்ஸ்மேனை விரும்பினால், குல்தீப் யாதவ் வெளியே அமரவைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஏற்கனவே துபே, தனது பந்துவீச்சு முன்னேற்றத்திற்கு மோர்கல் தான் காரணம் என்று கடந்த பிப்ரவரியில் பாராட்டியிருந்தார். தற்போது மோர்கலின் கருத்தும் சிவம் துபேவுக்கு ஆதரவாக இருப்பதால் அவர் ஆடும் லெவனில் நிச்சயம் இடம் பிடிப்பார் என தெரிகிறது.
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ஜிதேஷ் சர்மா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.