துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்கி வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. காரணம் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த போட்டி நடைபெற கூடாது என்று ரசிகர்கள் வலியுறுத்தினர். எனினும் சர்வதேச விளையாட்டுக்கு உள்ள நெறிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் தான் இந்த போட்டிகளில் விளையாட இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கின்றது.

எனினும் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கும், இந்தியா வீரர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடர் அறிமுக நிகழ்ச்சி நேற்று துபாயில் நடைபெற்றது. தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மோஷின் நக்வி செயல்படுகிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக உள்ள அவர்தான் பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சராகவும் இருக்கின்றார். மோஷின் நக்வி இந்தியாவுக்கு எதிராக பல சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அண்மையில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராக இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மோஷின் நக்வி பேசியிருந்தார்.
இதனால் அவரை புறக்கணிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மோஷின் நக்வி வந்த போது இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் மரியாதை நிமித்தமாக அவரை கைகுலுக்கி பேசினார். இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வரும் பாகிஸ்தான் அமைச்சருடன் எப்படி இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் கைக்குலுக்கி இருக்கலாம். அவர் வந்தபோது அவருக்கு கை கொடுக்காமல் தனது எதிர்ப்பை சூரியக்குமார் யாதவ் தெரிவித்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் அவரை நோக்கி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
சூரியகுமார் யாதவ் செய்தது மிகப்பெரிய தவறு என்றும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா-பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை நாங்கள் பார்க்க மாட்டோம் என்றும், புறக்கணிக்க போகிறோம் என்றும் சிலர் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.