துபாய்: ஆசிய கோப்பை தொடரின் இந்திய அணி தாங்கள் விளையாடிய முதல் லீக் ஆட்டத்தில் யுஏஇ அணியை 57 ரன்களில் சுருட்டியது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவரில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தின் போது சூரியகுமார் செய்த ஒரு சம்பவம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆட்டத்தின் 13 வது ஓவரில் சிவம் துபே வீசிய பந்தை சித்திக் என்ற பேட்ஸ்மேன் அடிக்க முற்பட்டார்.

ஆனால் பந்து பேட்டை மிஸ் ஆனது. இதை அடுத்து பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், அதை தூக்கி ஸ்டெம்பில் எறிந்தார். அப்போது பேட்ஸ்மேன் கிரீஸ்குள்ளே நிற்காமல் வெளியே நின்றதால், அது மூன்றாம் நடுவரின் ரீப்ளேவில் அவுட் என தெரியவந்தது. ஆனால் கள நடுவரிடம் சென்ற சூரியகுமார் யாதவ், இந்த அப்பிலை நாங்கள் திரும்ப பெற்றுக்கொள்கிறோம்.
அவரை விளையாட அனுமதியுங்கள் என்று கூறினார். எனினும் இந்த சம்பவம் நடைபெற்ற போது யுஏஇ அணி 9 விக்கெட் இழ்ப்பிற்கு 55 ரன்கள் தான் எடுத்தது.அதன் பிறகு அந்த அணி மேலும் இரண்டு ரன்கள் தான் எடுத்திருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் விமர்சகர் ஆகாஷ் சோப்ரா, சூரியகுமார் செய்தது சரியா?தவறா? என்பதெல்லாம் தாண்டி இதே விஷயத்தை பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சல்மான் ஆகா பேட்டிங் செய்யும்போது வரும் 14ஆம் தேதி சூரியகுமார் இதையே செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
போட்டி விறுவிறுப்பான கட்டத்தில் இருக்கும் போது பெரிய அணிக்கு எதிராக இப்படி ஒரு சம்பவத்தை சூரியகுமார் நிச்சயம் செய்ய மாட்டார். அந்த விஷயத்தில் சஞ்சு சாம்சன் களத்தில் முழு கவனத்துடன் செயல்பட்டு பந்தை சரியாக எறிந்து ஆட்டம் இழக்க வைத்திருக்கின்றார். கிரீஸ் குள்ளே இருக்க வேண்டும் என்பது பேட்ஸ்மேனுக்கு தெரிய வேண்டாமா ?
விதிகளுக்கு உட்பட்டு சஞ்சு சாம்சன் இதை செய்திருக்கிறார். அப்படி இருக்கும்போது எதற்காக நான் நல்லவன் என்பது போல் காட்டிக் கொள்கிறீர்கள். இந்தப் பாதையில் இந்திய அணி பயணிக்க தேவையில்லை. விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே அவுட் செய்து இருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது ஏன் இவ்வாறு திரும்ப பெற வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள், யுஏஇ போதுமான இலக்கை அடிக்கவில்லை என்பதால் சூரியகுமார் அவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறுகின்றனர். மேலும் சிலர் யுஏஇ புதிய அணி என்பதால் பெரிய அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு அவர்களுக்கு எப்போதும் கிடைக்காது. அப்படி கிடைக்கும் பட்சத்தில் இது போல் ஆட்டம் இழக்க வைக்க தேவையில்லை என்று சூரியகுமார் நினைத்திருக்கலாம். அவர்களை ஊக்குவிக்க இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.