மும்பை: சுப்மன் கில் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவாரா? என்று சிலர் பேசி வரும் நிலையில், அவருக்கு இந்திய டி20 அணியிலேயே வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணித் தேர்வு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தொடரில் இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து வழிநடத்துவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், இளம் வீரரும், டெஸ்ட் கேப்டனுமான சுப்மன் கில் அணியில் இடம்பிடிப்பதே சந்தேகம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கவுள்ள ஆசிய கோப்பை தொடருக்கு, இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவே நீடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் காயத்திலிருந்து மீண்டுள்ள அவர், தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளார். ஆகஸ்ட் 19ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள அணித் தேர்வுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், சூர்யகுமார் யாதவின் தலைமையில் இந்திய அணி களமிறங்குவது உறுதியாகியுள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி, 754 ரன்கள் குவித்து சாதனை படைத்தவர் சுப்மன் கில். இதனால், டி20 அணிக்கும் அவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் அல்லது துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்படும் என்று பரவலாகப் பேசப்பட்டது. மேலும், ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், கில் நிச்சயம் அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போதைய நிலவரம் தலைகீழாக மாறியுள்ளது. அணி நிர்வாகம், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க ஜோடியை மாற்ற விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில்லுக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைப்பதே கடினம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை அவர் அணியில் சேர்க்கப்பட்டாலும், தொடக்க வீரராக களமிறங்குவது சந்தேகமே. இருப்பினும், சில செய்திகள் கில் அணிக்குத் திரும்புவார் என்றும், அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படலாம் என்றும் குறிப்பிடுகின்றன. இதனால், அவரது தேர்வு குறித்து ஒருவிதமான குழப்பம் நீடித்து வருகிறது.
சுப்மன் கில்லைப் போலவே, இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கும் ஆசிய கோப்பைக்கான டி20 அணியில் இடம் கிடைக்காது எனத் தெரிகிறது. ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் உடன், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சுக்கு ஜஸ்பிரித் பும்ரா திரும்புவது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 19ஆம் தேதியில் அறிவிக்கப்பட உள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, யாருக்கு வாய்ப்பளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சுப்மன் கில்லின் எதிர்காலம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் அணித் தேர்வுக்குப் பிறகே விடை கிடைக்கும்.