மும்பை: ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ள 2025 ஆசிய கோப்பை தொடருக்காக, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி செப்டம்பர் 4 அல்லது 5-ஆம் தேதி துபாய்க்குப் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மெகா தொடருக்கு முன்பாக இந்திய வீரர்களுக்குத் தனியாகப் பயிற்சி முகாம் எதுவும் நடத்தப்படாது என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செப்டம்பர் 9-ஆம் தேதி துபாய் மற்றும் அபுதாபியில் ஆசியக் கோப்பைத் தொடர் தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில், செப்டம்பர் 10-ஆம் தேதி போட்டியை நடத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. தொடர் தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்பே இந்திய அணி துபாய் செல்லவிருக்கிறது.

இந்திய வீரர்கள் கடைசியாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் விளையாடினர். அதன்பிறகு, மார்ச் முதல் ஜூன் வரை நடைபெற்ற 2025 ஐபிஎல் தொடரில் பங்கேற்றனர். ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதால், ஆசியக் கோப்பைக்குத் தனியாகப் பயிற்சி முகாம் தேவையில்லை எனத் தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தொடரில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி செப்டம்பர் 14-ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 19-ஆம் தேதி ஓமன் அணியுடன் இந்தியா மோதுகிறது. தொடரின் வடிவம் மற்றும் புள்ளிப்பட்டியலைப் பொறுத்து, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மோத வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 10 (புதன்): இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம்
செப்டம்பர் 14 (ஞாயிறு): இந்தியா vs பாகிஸ்தான்
செப்டம்பர் 19 (வெள்ளி): இந்தியா vs ஓமன்
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.
மாற்று வீரர்கள் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜுரல்.