மும்பை: வளரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய ஏ அணியில் வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜித்தேஷ் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பிரியன்ஷ் ஆர்யா, நேஹல் வதேரா, நமன் திர், சூர்யன்ஷ் ஷெட்கே உள்ளிட்டோரும் தேர்வாகி இருக்கின்றனர்.
ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆனால் இதுநாள் வரை ஆசியக் கோப்பையை இந்திய அணியிடம் கொடுக்காமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி தில்லாங்கடி செய்து வருகிறார். ஆனால் இந்திய அணி அதனைப் பற்றி கவலைப்படவில்லை.

அடுத்தடுத்த கிரிக்கெட் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் வளரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பைத் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. நவம்பர் 14ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர், நவம்பர் 23ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. மொத்தமாக 8 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், ஓமன், ஹாங் காங், ஐஏஇ ஆகிய 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 14ஆம் தேதி நடக்கும் போட்டியில் ஓமன் - பாகிஸ்தான், இந்தியா -ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் விளையாடுகின்றன. இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் விளையாடும்.
இந்த நிலையில் வளரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு நட்சத்திர விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வைபவ் சூர்யவன்ஷி, பிரியன்ஷ் ஆர்யா, நேஹல் வதேரா, நமன் திர், சூர்யன்ஷ் ஷெட்கே, ரமன்தீப் சிங், ஹர்ஷ் துபே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அஷிதோஷ் சர்மா, யாஷ் தாக்கூர், குர்ஜப்னீத் சிங், விஜய் குமார் வைஷாக், யுதுவிர் சிங் சரக், அபிஷேக் போரெல், சுயாஷ் சர்மா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஸ்டாண்ட் பை வீரர்களாக குர்னூர் சிங், குமார் குசாகா, தனுஷ் கோட்டியான், சமீர் ரிஸ்வி, ஷேக் ரஷீத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய யு19 அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி விளையாடி வரும் நிலையில், வளரும் வீரர்களுக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இதனால் அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் வைபவ் சூர்யவன்ஷி இந்திய சீனியர் அணிக்காகவும் அறிமுகம் ஆகுவார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.