துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டி நடக்க உள்ளது ஒருபுறம் இருக்க, வங்கதேச அணிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டியை உறுதி செய்வதற்காகவே தொடரின் அட்டவணை திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டதாகவும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் சிலர் குற்றம் சாட்டியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?
வியாழக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் - வங்கதேசம் மோதிய சூப்பர் 4 போட்டியில், வங்கதேச அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சூப்பர் சுற்றில் தான் ஆடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற வங்கதேச அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அதே சமயம் பாகிஸ்தான் அணி, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு அணிகளையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ள கருதப்பட்ட வங்கதேச அணிக்கு, இந்தத் தொடரில் நியாயமற்ற சூழல் உருவாக்கப்பட்டதாக வர்ணனையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, அந்த அணி அடுத்தடுத்த நாட்களில் இரண்டு முக்கியமான சூப்பர் 4 போட்டிகளில் விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்த சூப்பர் 4 போட்டிக்கு முந்தைய நாள், புதன்கிழமை அன்று, வங்கதேசம் இந்திய அணிக்கு எதிராக விளையாடியது. இப்படி இரண்டு பெரிய போட்டிகளுக்கு இடையில் ஒரு நாள் கூட ஓய்வு இல்லாததால், வங்கதேச வீரர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் சோர்வடைந்திருந்ததாகவும், அதனால் அவர்களால் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்றும் வர்ணனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தத் தொடருக்கான அட்டவணை, கடந்த ஜூலை மாதமே, அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் (ACC) வெளியிடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிப் போட்டியை நடத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த அட்டவணையிலேயே, குரூப் பி பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணி அடுத்தடுத்த நாட்களில் சூப்பர் 4 சுற்றில் விளையாடும் என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படியே குரூப் பி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த வங்கதேசம் விளையாடியது.
"இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு மட்டும் ஏன் அடுத்தடுத்த நாட்களில் சூப்பர் 4 போட்டிகள் வைக்கப்படவில்லை? வங்கதேசத்திற்கு இது கிட்டத்தட்ட ஒரு அரையிறுதிப் போட்டி. பாகிஸ்தானுடன் தோற்றால் தொடரில் இருந்தே வெளியேறும் என்ற நிலை இருந்தது. ஆனால், அவர்களுக்கு ஓய்வெடுக்கக் கூட நேரம் கொடுக்கப்படவில்லை. மறுபுறம், பாகிஸ்தான் அணி முழு ஓய்வுடன் புத்துணர்ச்சியுடன் களமிறங்கியது. இந்த அட்டவணை பாகுபாடு, போட்டியின் முடிவில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று வங்கதேச அணிக்கு ஆதரவான வர்ணனையாளர்கள் கூறியுள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டி, வணிக ரீதியாகவும், ரசிகர்களின் ஆர்வத்தின் அடிப்படையிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதால், அதற்காகவே ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) திட்டமிட்டு இந்த அட்டவணையை வடிவமைத்ததா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.