மும்பை: 2025 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடர் வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கிறது. இந்த தருணத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பிடித்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல் அதிகபட்சமாக மூன்று முறை இரு அணிகளும் இந்த தொடரில் மோத வாய்ப்பு இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே பல பிரச்சனைகள் நிலவிவரும் நிலையில், இந்தக் கட்டத்தில் கிரிக்கெட் ஒரு கேடா என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து இந்தியா விலக வேண்டும் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த தருணத்தில் ஆசிய கோப்பை போட்டியில் இருந்து இந்தியா ஏற்கனவே ஒரு முறை விலகி இருக்கிறது. அதைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
ஆசிய கோப்பை 1984 ஆம் ஆண்டு அறிமுகமானது. இந்த தொடரில் முதல் சீசனிலே இந்திய அணி தான் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனை அடுத்து 1986 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டி இலங்கையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தருணத்தில் இலங்கையில் அந்நாட்டு அரசுக்கும் விடுதலை புலிகள் இயக்கத்திற்கும் இடையே யுத்தம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இதனால் இந்திய வீரர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பு இல்லை என்று கூறி மத்திய அரசு இந்திய வீரர்கள் செல்ல அனுமதி மறுத்தது. இதனை அடுத்து ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்தியா விலகியது. கடைசி நேரத்தில் இந்தியா விலகியதை அடுத்து இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று அணிகள் மட்டும் தான் இந்த தொடரில் விளையாடுகிறது.
இதில் இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த சூழலில் தற்போது 2025 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டி துபாயில் தான் நடைபெறுகிறது என்றாலும் பாகிஸ்தான் உடனான போட்டிக்கு தான் தற்போது எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் 1986 ஆம் ஆண்டு போல் இந்தியா மீண்டும் ஆசிய கோப்பையில் கலந்து கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.