சஞ்சு சாம்சன் பேட்டிங் வரிசையில் 5வது இடத்தில் களமிறங்கியது ஏன்? ஸ்ரீகாந்த் சொன்ன காரணம்
சென்னை: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் யுஏஇ அணிக்கு எதிராக விளையாடியது.
இதில் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா தொடக்க வீரராக விளையாடினர். இதன் காரணமாக சஞ்சு சாம்சன் ஐந்தாவது வீரராக பேட்டிங் வரிசையில் இடம் பிடித்து இருந்தார். தொடக்க வீரராக இருக்கும் சஞ்சு சாம்சனை நடு வரிசையில் களமிறங்கியது ஏன் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், "சஞ்சு சாம்சனை பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்தில் களமிறங்குவதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு கொண்டுவர முயற்சி நடக்கிறது என்று நான் நினைக்கின்றேன். ஏனென்றால் நடுவரிசையில் சஞ்சு சாம்சன் பெரிய அளவு பேட்டிங் செய்தது கிடையாது."
"அது அவருடைய இடமும் அல்ல. இப்படி இருக்கும் போது அவருடைய நம்பிக்கை நிச்சயம் அடிவாங்கும். நிச்சயமாக சஞ்சு சாம்சன் ஐந்தாவது வீரராக களம் இறக்கப்பட்டதில் எனக்கு எந்த ஒரு மகிழ்ச்சியும் இல்லை. ஆனால் சஞ்சு சாம்சனுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். இதுதான் உன்னுடைய கடைசி வாய்ப்பு."
"இனி அடுத்த மூன்று இன்னிங்ஸ்களில் ஐந்தாவது இடத்தில் களம் இறங்கி நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் ஸ்ரேயாஸ் உங்களுடைய இடத்தை பிடித்து விடுவார். தற்போது சஞ்சு சாம்சனை நடுவரிசையில் களம் இறக்க இருக்கிறீர்கள். அவரை என்ன பினிஷர் பொறுப்புக்கு நீங்கள் பயன்படுத்த போகிறீர்களா?"
"என்னைக் கேட்டால் ஹர்திக் பாண்டியா அல்லது சிவம் துபே ஆகியோர்தான் அந்த இடத்தை பிடிக்க வேண்டும். சாம்சன் ஐந்தாவது இடத்தில் களம் இறக்கப்பட்டால், அவரால் ரன் அடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே? அது மட்டும் இல்லாமல் நடுவரிசையில் சஞ்சு சாம்சன் களமிறங்குவதன் மூலம் ஜித்தேஷ் சர்மாவுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இது ஆசிய கோப்பை என்பதால் பரவாயில்லை. ஆனால் டி20 உலக கோப்பையில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது" என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications