துபாய்: இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டியின் 'கைகுலுக்கல் சர்ச்சை' விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் அணிக்கு எதிராக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ள நிலையில், கிரிக்கெட்டின் விதிகளின்படி இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய அணிக்கு தண்டனை அளிக்கப்படுமா? அதற்கு சாத்தியம் உள்ளதா? என்று பார்க்கலாம்.
2025 ஆசியக் கோப்பை குரூப் ஏ பிரிவுப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு, வெற்றி ரன்னை அடித்த கேப்டன் சூர்யகுமார் யாதவும், சிவம் துபேவும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் நேராக வீரர்கள் அறைக்குத் திரும்பினர். பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் 'ஆபரேஷன் சிந்தூர்' ஆகியவற்றிற்குப் பிறகு நடந்த முதல் போட்டி என்பதால், இந்தச் செயல் பெரும் கவனத்தைப் பெற்றது.

போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் சூர்யகுமார், பெஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் துணையாக நிற்பதாகவும், இந்த வெற்றியை இந்திய ராணுவப் படைகளுக்கு சமர்ப்பிப்பதாகவும் கூறினார். இதன் காரணமாகவே கைகுலுக்கலைத் தவிர்த்ததாக அவர் மறைமுகமாக உணர்த்தினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய வீரர்களின் செயல் கிரிக்கெட்டின் மாண்புக்கு எதிரானது என்று குற்றம் சாட்டியுள்ளது. எம்சிசி-யின் (Marylebone Cricket Club) கிரிக்கெட் சட்டப் புத்தகத்தில், 'கிரிக்கெட்டின் மாண்பு' என்ற முன்னுரையில் கூறப்பட்டிருப்பதாவது:
"கிரிக்கெட்டின் மையமாக இருப்பது மரியாதை. எதிரணியின் வெற்றியைப் பாராட்டுங்கள், உங்கள் அணியின் வெற்றிகளைக் கொண்டாடுங்கள். போட்டியின் முடிவில், முடிவு எதுவாக இருந்தாலும், நடுவர்களுக்கும் எதிரணிக்கும் நன்றி தெரிவியுங்கள்."
"கிரிக்கெட் என்பது தலைமைத்துவம், நட்பு மற்றும் அணியாக சேர்ந்து செயல்படுவது ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒரு அற்புதமான விளையாட்டு. குறிப்பாக அது கிரிக்கெட்டின் மாண்புடன் விளையாடப்படும்போது, இது வெவ்வேறு தேசிய இனங்கள், கலாச்சாரங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கிறது." என்றும் அந்த விதிமுறைப் புத்தகம் கூறுகிறது.
எம்சிசி-யின் முன்னுரையில், போட்டிக்குப் பிறகு எதிரணியுடன் கைகுலுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது ஒரு கட்டாய விதி அல்ல என்பதுதான் இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.
பரிந்துரையே தவிர கட்டாயமல்ல: 'கிரிக்கெட்டின் மாண்பு' என்பது ஒரு வழிகாட்டுதல் மற்றும் பரிந்துரையே தவிர, அதை மீறினால் தண்டனை விதிக்கப்படும் என்று சட்டப் புத்தகத்தில் எங்கும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
நடுவரின் பங்கு: இந்த விவகாரத்தில் மிக முக்கியமான அம்சம், போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டின் பங்கு. டாஸ் நிகழ்வின்போதே, இரு அணி கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்வதையும், அணிப் பட்டியல்களைப் பரிமாறிக் கொள்வதையும் நடுவரே தடுத்துள்ளார். போட்டி தொடங்குவதற்கு முன்பே நடுவரின் மேற்பார்வையில் ஒரு சம்பிரதாயம் தவிர்க்கப்படும்போது, போட்டி முடிந்த பிறகு அதே செயலுக்காக வீரர்களைத் தண்டிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனெனில், வீரர்கள் மீதான இறுதி குற்றச்சாட்டை முன்வைப்பவர் போட்டி நடுவரே. எனவே, அவர் தனது செயலை தவறு என சொல்ல முடியாது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்திருந்தாலும், கிரிக்கெட் விதிகளின்படி கைகுலுக்குவது கட்டாயமாக்கப்படாததால், சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய அணிக்கு எதிராக அபராதம் அல்லது வேறு எந்தவிதமான தண்டனையும் விதிக்கப்படுவது சாத்தியமில்லை என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். இது கிரிக்கெட்டின் எழுதப்படாத விதியை மீறிய செயலாகப் பார்க்கப்படலாமே தவிர, நடைமுறையில் உள்ள ஒரு விதியை மீறிய குற்றமாக ஆகாது.