துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, கோப்பையை வழங்காமல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவர் மோஷின் நக்வி அதனுடன் மைதானத்தை விட்டு வெளியேறிய சம்பவம், தற்போது அவரது பதவிக்கே ஆபத்தை உண்டாக்கியுள்ளது.
உலகின் சக்திவாய்ந்த கிரிக்கெட் அமைப்பான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), நக்வியை பதவியிலிருந்து நீக்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரத் தயாராகி வருவதாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது ஆசிய கிரிக்கெட் உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்திய பிறகு, பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஏசிசி தலைவரான மோஷின் நக்வி, இந்திய அணிக்கு கோப்பையை வழங்க மேடையில் காத்திருந்தார். ஆனால், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் இருக்கும் நக்வியின் கைகளால் கோப்பையைப் பெற இந்திய அணி வீரர்கள் மறுத்துவிட்டனர். இந்த முடிவை பிசிசிஐ முன்பே ஏசிசி அதிகாரிகளிடம் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்திய வீரர்களின் இந்த திடீர் முடிவு நக்வியை கடும் கோபத்திற்குள்ளாக்கியது. நீண்ட நேரம் மேடையில் காத்திருந்த அவர், இந்திய வீரர்கள் வராததால், கோப்பை மற்றும் பதக்கங்களுடன் அங்கிருந்து வெளியேறினார். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சாம்பியன் அணிக்கு கோப்பை வழங்கப்படாமல், விழா பாதியிலேயே நின்றது இதுவே முதல் முறையாகும். இந்த நிகழ்வு இரு நாட்டு கிரிக்கெட் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
மோஷின் நக்வியின் இந்தச் செயல் "நாகரிகமற்றது" என்று கடுமையாக விமர்சித்த பிசிசிஐ, அவரை ஏசிசி தலைவர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, ஏசிசியின் முழுநேர உறுப்பு நாடுகளான இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியோரின் ஆதரவைத் திரட்ட பிசிசிஐ முயன்று வருகிறது. இதில், இலங்கை இந்தியாவிற்கு ஆதரவாகவும், வங்கதேசம் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இருப்பதாகத் தெரிகிறது. ஆப்கானிஸ்தான் அணி யாருக்கு ஆதரவளிப்பது என்ற குழப்பத்தில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நக்வி தனது செயலுக்காக பிசிசிஐயிடம் மன்னிப்புக் கேட்டதாகச் சில செய்திகள் வெளியாகின. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், நக்வியும் இதை முற்றிலுமாக மறுத்துள்ளனர். "நான் எந்தத் தவறும் செய்யவில்லை, யாரிடமும் மன்னிப்பு கேட்கவும் இல்லை. இந்திய ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றன" என்று நக்வி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், துபாயில் உள்ள ஏசிசி அலுவலகத்திற்கு நேரில் வந்து கோப்பையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஏசிசி கூட்டத்திலும் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. ஆனால், அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
2025 ஆசிய கோப்பை தற்போது ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், பிசிசிஐயின் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுமா, மோஷின் நக்வியின் பதவி தப்புமா என்பது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில்தான் தெரியவரும்.