Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia Cup: தைரியம் இருந்தா இந்தியா மீது புகார் சொல்லுங்க.. அவமானப்பட்ட பாகிஸ்தான்.. ஐசிசி 'டோஸ்'

துபாய்: இந்தியாவுடனான 'கைகுலுக்கல் சர்ச்சை' தொடர்பாக, போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) சுமத்திய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. "உண்மையான பிரச்சினை கைகுலுக்காதது என்றால், தைரியம் இருந்தால் அந்த முடிவை எடுத்தவர்கள் மீது புகார் அளியுங்கள். அதை விடுத்து, நடுவர் மீது பழிபோடுவது ஏன்?" என்று ஐசிசி கேட்டுள்ளது. அதாவது இந்திய அணி தான் பிரச்சனை என்றால் அவர்கள் மீது புகார் கொடுங்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சீண்டி விட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டிக்கு, ஆண்டி பைக்ராஃப்ட் தான் நடுவராக நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தான் அணி போட்டிக்கு வர மறுத்து, தங்கள் ஹோட்டலிலேயே முகாமிட்டது. இதனால், இரவு 8 மணிக்குத் தொடங்க வேண்டிய போட்டி, ஒரு மணி நேரம் தாமதமாக 9 மணிக்கே தொடங்கியது. ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி சஞ்சோக் குப்தா, பிசிபி தலைவர் மோஷின் நக்வியிடம் தொலைபேசியில் பேசி, "பைக்ராஃப்ட் விதிகளின்படியே நடந்து கொண்டார், அவர் மாற்றப்பட மாட்டார்," என்று உறுதியாகத் தெரிவித்த பிறகே, பாகிஸ்தான் அணி மைதானத்திற்கு வந்தது.

இதற்குப் பதிலடியாக, ஐசிசி ஆறு அம்சங்கள் கொண்ட ஒரு விரிவான மற்றும் கடுமையான கடிதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பியுள்ளது. அதில், பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று நிராகரித்துள்ளது.

Asia Cup Dare to Complain Against India ICC Reprimands Pakistan in match referee issue

ஐசிசியின் கடிதத்தில் உள்ள முக்கிய அம்சங்கள்:

ஆதாரம் எங்கே?: "பிசிபி அளித்த புகாரின் அடிப்படையில் ஐசிசியின் விசாரணை நடத்தப்பட்டது. அந்த அறிக்கையுடன் எந்தவொரு துணை ஆவணமோ அல்லது ஆதாரமோ வழங்கப்படவில்லை என்பதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்."

நடுவர் மீது தவறில்லை: "ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) மைதான மேலாளரின் தெளிவான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, போட்டி நடுவர் எடுத்த நடவடிக்கைகள், ஒரு போட்டி நடுவர் இதுபோன்ற ஒரு பிரச்சினையை எப்படி கையாள்வாரோ, அதற்கு இசைவாகவே இருந்தது. டாஸுக்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் இந்த விஷயம் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது."

தர்மசங்கடத்தை தவிர்த்தார்: "டாஸின் புனிதத்துவத்தைப் பாதுகாக்கவும், அப்போது ஏற்படக்கூடிய எந்தவொரு தர்மசங்கடத்தைத் தவிர்க்கவும் போட்டி நடுவர் உறுதியாக இருந்தார். இதில் போட்டி நடுவரின் தவறு எதுவும் இல்லை. ஆட்டக்களத்திற்கு வெளியே ஒப்புக்கொள்ளப்பட்ட எந்தவொரு அணி அல்லது தொடர் சார்ந்த நெறிமுறைகளை ஒழுங்குபடுத்துவது போட்டி நடுவரின் பங்கு அல்ல. அது தொடர் அமைப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அணி மேலாளர்களின் விஷயம்."

இறுதி 'டோஸ்':

ஐசிசி தனது கடிதத்தின் முடிவில், பாகிஸ்தானுக்கு ஒரு மறைமுக சவாலையே விடுத்துள்ளது. "...பிசிபியின் உண்மையான கவலை அல்லது புகார், கைகுலுக்கல் நடக்கவில்லை என்ற உண்மையான முடிவைப் பற்றியதாக இருக்கலாம். அப்படியானால், பிசிபி அந்தப் புகார்களை தொடர் அமைப்பாளர்களிடமும், உண்மையான முடிவை எடுத்தவர்களிடமும் (அது போட்டி நடுவர் அல்ல) தெரிவிக்க வேண்டும். அதில் ஐசிசிக்கு எந்தப் பங்கும் இல்லை" என்று ஐசிசி கூறியுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், "உங்கள் பிரச்சினை இந்திய வீரர்கள் கைகுலுக்காதது என்றால், தைரியம் இருந்தால் அவர்கள் மீது புகார் கொடுங்கள், அதைவிடுத்து நடுவர் மீது பழிபோட்டு பிரச்சினையைத் திசை திருப்பாதீர்கள்" என்று ஐசிசி பாகிஸ்தானுக்குக் குட்டு வைத்துள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரே இருக்கும் நிலையில், ஐசிசி பந்தை மீண்டும் பாகிஸ்தான் பக்கமே திருப்பிவிட்டுள்ளது, இந்தச் சர்ச்சையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது நம்பகத்தன்மையை முழுமையாக இழந்து, சர்வதேச அளவில் பெரும் அவமானத்தைச் சந்தித்துள்ளது என்பதே உண்மை.

Story first published: Thursday, September 18, 2025, 10:48 [IST]
Other articles published on Sep 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+