கொழும்பு : இலங்கை அணிக்கு எதிரான 2023 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இலங்கை அணியை இந்தியா 50 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தது. இலங்கை அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பரிதாபமாக தோல்வி அடைந்தது.

இந்திய அணியில் முதல் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். அதன் பின் முகமது சிராஜ் நான்காவது ஓவரில் மட்டும் 4 விக்கெட் வீழ்த்தினார். மொத்தமாக அவர் 7 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்கள் சாய்த்தார்.
இலங்கை அணி 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த நிலையில், அடுத்து இந்திய அணி இஷான் கிஷன், சுப்மன் கில்லை துவக்க வீரர்களாக களமிறக்கியது. இந்த ஜோடி 6.1 ஓவரில் வெற்றி இலக்கான 51 ரன்களை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
முன்னதாக இந்தப் போட்டியில் டாஸில் இந்தியா தோல்வி அடைத்திருந்தது. இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அப்போது கொழும்பு ஆடுகளத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்வது கடினம் என்ற நிலையில் இந்தியா சிக்கலில் மாட்டிக் கொண்டாதாகவே பலரும் எண்ணினர். இந்திய அணி வீரர்களும் அதை மனநிலையில் இருந்ததை இஷான் கிஷன் போட்டிக்கு பின் அளித்த பேட்டியில் கூறினார்.
இஷான் கிஷன் கூறுகையில், "அனைத்து பாராட்டுகளும் பவுலர்களுக்கு தான். அவர்கள் மிக அற்புதமாக, நன்றாக பந்து வீசினார்கள். முதல் பந்தில் இருந்தே அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர். குறிப்பாக, சிராஜ் மிகச்சிறப்பாக செயல்பட்டார். நாங்கள் இங்கே (கொழும்பு மைதானத்தில் சில போட்டிகளில் ஆடி இருக்கிறோம். இங்கே இரண்டாவதாக பேட்டிங் செய்வது மிகவும் கடினம். ஆனால், டாஸில் தோற்றோம். அது பரவாயில்லை. நாங்கள் எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருந்தோம். இங்கே எனக்கு துவக்கம் அளிக்க கிடைத்த வாய்ப்பு நல்ல விஷயம். எனது ஷாட்களை ஆடினேன். வாய்ப்பு கொடுத்த கேப்டனுக்கு நன்றி. நான் மிடில் ஆர்டரில் என்ன செய்தேனோ அதையே தான் செய்தேன்" எனக் கூறி இருந்தார்.