கொழும்பு : 2023 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் மரண அடி வாங்கி படுதோல்வி அடைந்து இருக்கிறது இலங்கை.
அந்த அணியில் அனுபவ வீரர்கள் பலர் காயம் காரணமாக வெளியேறி இருந்தனர். எனினும், ஆசிய கோப்பையில் இறுதிப் போட்டி வரை வந்ததால் சிறிய நம்பிக்கை இருந்தது.

ஆனால், இந்திய அணியின் முகமது சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்திய போதே அந்த நம்பிக்கை தவிடு பொடியானது. சிராஜ் 6 விக்கெட்களையும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஹர்திக் பாண்டியா கடைசி 3 விக்கெட்களை சாய்த்தார். அடுத்து அந்த அணி 15.2 ஓவரில் 50 ரன்களை இழந்தது. அடுத்து இந்திய அணி 6.1 ஓவரில் 51 ரன்கள் வெற்றி இலக்கை எட்டி எட்டாவது முறையாக ஆசிய கோப்பையை வென்று அசத்தியது.
இதை சற்றும் எதிர்பாராத இலங்கை அணி செய்வதறியாத நிலையில் உள்ளது. அந்த அணியின் பயிற்சியாளர் இந்த படுதோல்வி பற்றி போட்டிக்கு பின் பேட்டியில் கூறியபோது மிகவும் கீழான ஆட்டத்தை இலங்கை வெளிப்படுத்தியதாகவும், சில வீரர்கள் மீது நம்பிக்கை இருந்தது, ஆனால் இன்று எல்லாமே ஏமாற்றமாக மாறி விட்டது என்றார்.
இலங்கை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் பேசிய முழு பதிவு இங்கே -
"இது மிகவும் கீழான ஆட்டம். நாங்கள் ஆட்டமிழந்த விதம் மிகவும் ஏமாற்றமாக உள்ளது. எங்கள் அறையில் நாங்கள் என்ன செய்தோம் என்பது குறித்து நாங்கள் ஆராய வேண்டும். இன்று நாங்கள் மிகச் சிறந்த தரமான பந்துவீச்சு தாக்குதலை எதிர்கொண்டோம். பும்ரா, சிராஜ் அட்டகாசமாக இருந்தனர். அவர்கள் நல்ல வேகத்திலும் வீசினார்கள். அதே நேரத்தில் நாங்களும் சரியாக ஆடவில்லை. நாங்கள் இந்த போட்டிக்கு முன் சில நல்ல இளம் பந்துவீச்சாளர்களுடன் வந்தோம். அவர்கள் சிலர் நன்றாக ஆடி இருந்தார்கள். இந்த தொடரில் சதீரா பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஆனால், இன்று எல்லாமே பெரும் ஏமாற்றமாக இருந்தது. நிச்சயம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும். ஆனால், எங்கள் உணர்ச்சிகள் அடங்கிய பின் நாளை அதை பற்றி நாங்கள் சிந்திப்போம்" என்றார் கிறிஸ் சில்வர்வுட்.