உடைந்து போன இலங்கை.. கிரிக்கெட் வரலாற்றில் படுமோசமான ரெக்கார்டு.. சிராஜ் கொடுத்த ஷாக்
கொழும்பு : இலங்கை கிரிக்கெட் வரலாற்றிலேயே படுமோசமான நாள் இதுதான்.
இந்திய அணிக்கு எதிராக 12 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து படுமோசமான நிலைமைக்கு சென்றுள்ளது இலங்கை அணி.
கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் அணிகளிலேயே படுமோசமான சாதனையை செய்துள்ளது. அதிலும், இந்த மோசமான சாதனை ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் நடந்துள்ளது என்பதுதான் அந்த அணியை நிலைகுலையச் செய்துள்ளது.

ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு தயாரான இலங்கை அணியில் முக்கியமான வீரர்கள் பலர் இடம் பெறவில்லை. காயம் காரணமாக அந்த அணியில் ஐந்து பந்துவீச்சாளர்கள் ஏற்கனவே நீக்கப்பட்டு இருந்தனர்.
கிட்டத்தட்ட இரண்டாம் கட்ட அணியை வைத்துக் கொண்டு தான் இலங்கை அணி இந்தியாவை இறுதிப் போட்டியில் சந்தித்தது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த முடிவு அவர்களுக்கே பெரிய பாதகமாக அமைந்தது.
இந்திய அணியில் பும்ரா, முகமது சிராஜ் பந்து வீசத் துவங்கினர். பும்ரா முதல் ஓவரிலேயே குசால் பெரேரா விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து நான்காவது ஓவரில் மட்டும் முகமது சிராஜ் நான்கு விக்கெட்களை வீழ்த்தி இலங்கை அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
இலங்கை அணி 12 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. அடுத்த பும்ரா ஓவர் மெய்டன் ஆக மாறியது. மீண்டும் ஆறாவது ஓவரில் சிராஜ் தசுன் ஷன்கா விக்கெட்டை சாய்த்தார். 12 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது இலங்கை.
இதன் மூலம், ஒருநாள் போட்டி இறுதிப் போட்டியில் முதல் 5 விக்கெட்களை குறைந்த ரன்களுக்கு இழந்த அணிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக 2009இல் வங்கதேச அணிக்கு எதிராக இலங்கை அணி 6 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இருந்தது. அதை விட 6 ரன்கள் இப்போது அதிகம் எடுத்தது மட்டுமே ஆறுதல்.
மேலும், 6 விக்கெட்டுக்கு மிகக் குறைந்த ரன்களை எடுத்த அணிகளின் பட்டியலில் கனடாவுக்கு பின் 6 விக்கெட்டுக்கு 12 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளது இலங்கை அணி. கனடா 6 விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் மற்றும் 12 ரன்கள் எடுத்து முதல் இரண்டு இடங்களில் உள்ளது. அதில் இரண்டாம் இடத்தை இலங்கை அணியும் பகிர்ந்து கொண்டுள்ளது.
இந்தப் போட்டியைக் காண வந்த இலங்கை ரசிகர்கள் இந்த மோசமான பேட்டிங்கை கண்டு கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். சிலர் கண்கலங்கவும் செய்தனர்.


Click it and Unblock the Notifications