IND vs SL: இந்திய கேப்டன் சூர்யகுமார் செய்த செயல்.. நெகிழ்ந்த ரசிகர்கள்.. இலங்கை வீரருக்கு ஆறுதல்
துபாய்: 2025 ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசிப் போட்டியில், இந்திய அணி சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி முடிந்த பிறகு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்த ஒரு செயல், கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது. தந்தையை இழந்து துயரத்தில் இருந்த இலங்கை இளம் வீரர் துனித் வெல்லாலகேவுக்கு, சூர்யகுமார் யாதவ் களத்திற்கே சென்று ஆறுதல் கூறியது, நெகிழ்ச்சியான செயலாக அமைந்தது.
22 வயதான இலங்கை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை சுரங்கா வெல்லாலகே மாரடைப்பால் இறந்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் துனித் வெல்லாலகே விளையாடிக் கொண்டு இருந்த போதே இந்த சம்பவம் நடந்தது. இந்தத் துயரமான சூழலிலும், நாட்டிற்காக விளையாடும் தனது கடமையை உணர்ந்து, ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியுடன் மீண்டும் இணைந்தார்.

சூர்யகுமாரின் மனிதாபிமான செயல்:
வெள்ளிக்கிழமை நடைபெற்ற பரபரப்பான போட்டி, சூப்பர் ஓவர் வரை சென்று இந்தியாவின் வெற்றியுடன் முடிந்தது. போட்டி முடிந்ததும், இந்திய வீரர்கள் வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், இலங்கை வீரர் வெல்லாலகேவிடம் சென்றார். அவரது தோளில் ஆறுதலாகக் கை வைத்து, சில ஆதரவான வார்த்தைகளைக் கூறி, அவரை அணைத்துக்கொண்டார். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது.
திரில் வெற்றி பெற்ற இந்தியா:
இந்தப் போட்டியைப் பொறுத்தவரை, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, தனது மூன்றாவது தொடர்ச்சியான அரைசதத்தை அடித்து, 31 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். திலக் வர்மா 49 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 39 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இமாலய இலக்கைத் துரத்திய இலங்கை அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா, இந்தத் தொடரின் முதல் சதத்தை அடித்து மிரட்டினார். அவர் 58 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். அவருடன் குசல் பெரேரா (58) இணைந்து 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, இலங்கை அணி இந்தியாவின் ஸ்கோரை சமன் செய்தது. இதனால், போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்றது.
சூப்பர் ஓவரில், அர்ஷ்தீப் சிங் அபாரமாகப் பந்துவீசி, 5 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். பின்னர், 3 ரன்கள் என்ற எளிய இலக்கை, வனிந்து ஹசரங்கா வீசிய முதல் பந்திலேயே சேஸ் செய்து, சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
இந்த வெற்றியின் மூலம், இந்தத் தொடரில் தனது 6வது தொடர் வெற்றியைப் பதிவு செய்து, தோல்வியைச் சந்திக்காத ஒரே அணியாக இந்தியா வலம் வருகிறது. ஆசிய கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக இறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) அன்று நடைபெறும்.


Click it and Unblock the Notifications