IND vs SL: ஒரே சூப்பர் ஓவர் இரண்டு முறை.. அதே ஸ்கிரிப்ட்டில் நடந்த இந்தியா - இலங்கை டி20 போட்டி
துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று முடிந்தது. இந்த நிலையில், கடந்த 2024 ஜூலை 30 அன்று நடந்த இந்தியா - இலங்கை டி20 போட்டியும் இதேபோல சூப்பர் ஓவரில் முடிந்தது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், அந்த சூப்பர் ஓவரிலும், இந்த சூப்பர் ஓவரிலும் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து இரண்டு ரன்கள்தான் எடுத்திருந்தது. அதேபோல, இந்திய அணியும் முதல் பந்திலேயே வெற்றி பெற்றது.
இது மட்டுமல்ல. இந்த இரண்டு போட்டிகளுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளதைச் சுட்டிக்காட்டி ரசிகர்கள் தங்களின் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். எப்படி இரண்டு அணிகள் இரண்டு வெவ்வேறு ஆண்டுகளில் ஒரே மாதிரியான சூப்பர் ஓவரில் விளையாட முடியும் என்று தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜூலை 2024 3வது டி20 போட்டியில் என்ன நடந்தது?
கடந்த ஜூலை 2024 இல் நடந்த டி20 தொடரின் மூன்றாவது போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து ஆடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்ததால், போட்டி சமனில் முடிந்தது. அடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் நடந்தது.
சூப்பர் ஓவர்:
இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. சூப்பர் ஓவரில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீசினார். இரண்டாவது பந்தில் முதல் விக்கெட்டையும், மூன்றாவது பந்தில் இரண்டாவது விக்கெட்டையும் இலங்கை அணி இழந்தது. முதல் பந்தில் எடுத்த ஒரு ரன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் வீசிய ஒரு வைடு மட்டுமே இலங்கை அணி எடுத்த ரண்களாக இருந்தன. இலங்கை அணி சூப்பர் ஓவரில் இரண்டு ரன்கள் எடுத்தது. அடுத்து இந்திய அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் பேட்டிங் செய்ய வந்தனர். முதல் பந்தைச் சந்தித்த சூர்யகுமார் யாதவ் ஃபோர் அடித்து வெற்றி தேடி கொடுத்தார்.
செப்டம்பர் 2025 ஆசிய கோப்பை போட்டியில் என்ன நடந்தது?
நேற்று நடந்த இந்தப் போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை அணியும் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்ததால், போட்டி சமனில் முடிந்தது. அடுத்து சூப்பர் ஓவர் நடந்தது.
சூப்பர் ஓவர்
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது. அதன் பிறகு ஒரு ரன் எடுத்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய ஒரு வைடு மூலம் இரண்டாவது ரன்னையும் எடுத்தது. ஐந்தாவது பந்தில் இலங்கை அணி இரண்டாவது விக்கெட்டை இழந்தது. இதன் மூலம் சூப்பர் ஓவரில் இலங்கை அணி இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து இந்திய அணி சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்தபோது சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் பேட்டிங் செய்ய வந்தனர். முந்தைய போட்டியைப் போலவே, சூர்யகுமார் முதல் பந்திலேயே வெற்றிக்கான மூன்று ரன்களை ஓடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
நம்ப முடியாத ஒற்றுமைகள்!
இந்த இரண்டு சூப்பர் ஓவரிலும் உள்ள ஒற்றுமைகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன இரண்டு போட்டிகளிலும் இறுதி ஸ்கோர் சமன் ஆனது. இரண்டு சூப்பர் ஓவரிலும் இலங்கை அணி எடுத்தது இரண்டு ரன்கள் மட்டுமே. அந்த இரண்டு ரன்களில் ஒரு ரன் சிங்கிள் ஆகவும், மற்றொரு ரன் இந்தியப் பந்துவீச்சாளர் வீசிய வைடு மூலமும் கிடைத்தது. இந்தியாவின் சூப்பர் ஓவர் பேட்டிங்கிற்கு வந்தவர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில். முதல் பந்தைச் சந்தித்த சூர்யகுமார் யாதவ், முதல் பந்திலேயே வெற்றியை உறுதி செய்தார்.
இந்த ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டி ரசிகர்கள் தங்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் வழக்கம்போல இது எழுதி வைத்து நடத்தப்பட்ட ஸ்கிரிப்ட் ஆக இருக்குமோ என்று தங்கள் சந்தேகத்தையும் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications