சிட்னி: 2025 ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியில் இருந்து நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டது, இந்திய ரசிகர்களை மட்டுமல்லாது, ஆஸ்திரேலிய ஊடகங்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் மிகச்சிறப்பாக செயல்பட்ட ஒரு வீரரை எப்படி அணியில் இருந்து நீக்க முடியும் என்று அவர்கள் ஆச்சரியமும், குழப்பமும் அடைந்து கேள்வி எழுப்பி உள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர், 604 ரன்களை குவித்தார். அவர் 50.33 என்ற பேட்டிங் சராசரியிலும், 175.07 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டிலும் ரன் குவித்து, பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். இத்தகைய ஒரு சிறப்பான செயல்பாட்டிற்குப் பிறகும், 15 வீரர்கள் கொண்ட அணியில் மட்டுமல்ல, 5 வீரர்கள் கொண்ட காத்திருப்புப் பட்டியலிலும் கூட அவருக்கு இடம் கிடைக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, ஆஸ்திரேலியாவின் பிரபல 'LiSTNR Sport' பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனை அலிசா ஹீலி மற்றும் முன்னாள் வீரர் பிராட் ஹாடின் ஆகியோர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆடம் பீகாக், "ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இல்லை. வாட் தி..." என்று அதிர்ச்சியுடன் விவாதத்தைத் தொடங்க, உடனடியாக அலிசா ஹீலி, "ஓ மை காட்!" (கடவுளே!) என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். "அங்கே என்னதான் நடந்தது?" என்று பிராட் ஹாடின் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய பிராட் ஹாடின், "முதலில், தலைமைப் பண்பு. இரண்டாவதாக, அழுத்தமான சூழ்நிலைகளில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர் அவர். அவருடைய இருப்பு, மற்ற வீரர்களையும் சிறப்பாக விளையாடத் தூண்டும். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அணிப் பட்டியலைப் பார்த்தபோது, அவருக்குக் காயம் ஏற்பட்டிருக்குமோ என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், அதுவும் இல்லை. இது ஒரு விசித்திரமான முடிவு. உண்மையில், அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்," என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்த முடிவை 'ஒரு அசாதாரணமான தேர்வு' என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் திறமையான வீரர்கள் ஏராளமாக இருப்பதால், அணியைத் தேர்வு செய்வது கடினமாக உள்ளது என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்திருந்தார். ஆனால், ஒரு தொடரில் மிகச்சிறப்பாகச் செயல்பட்ட ஒரு கேப்டனை, அதுவும் இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு வலு சேர்க்கக்கூடிய ஒரு அனுபவ வீரரை எந்த அடிப்படையில் நீக்கினார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரமும் இந்த விவகாரத்தில் இந்திய தேர்வுக்குழுவை விமர்சித்திருப்பது, இந்தத் தேர்வின் மீதான சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.
இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சிவம் துபே, ரிங்கு சிங் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரின் அனுபவமும், கேப்டன்சி திறமையும் அணிக்குக் கூடுதல் பலமாக இருந்திருக்கும் என்பதே பலரது கருத்தாக உள்ளது. ஆஸ்திரேலிய ஊடகங்கள் மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் இந்திய தேர்வுக்குழுவின் இந்த முடிவை விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் இல்லாத நிலையில், ஸ்ரேயாஸ் போன்ற ஒரு அனுபவ வீரரின் பங்களிப்பு அணிக்கு மிகவும் தேவைப்படும் ஒரு சூழலில், இந்த நீக்கம் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.