லாகூர் : பாகிஸ்தான் அணி 2023 ஆசிய கோப்பை தொடரில் ஒரே ஒரு தோல்வியை சந்தித்து விட்டு கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணியாகவும், இந்திய அணியை எளிதாக வீழ்த்தும் அணியாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி விட்டது.

இதை எதிர்பார்க்காத பாகிஸ்தான் மக்கள் கொந்தளித்து போயுள்ளனர். பற்றி எரியும் அந்த நெருப்பில் மண்ணெண்ணெயை ஊற்றுவது போல பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களும் ஆளுக்கு ஒரு யூட்யூப் சேனல் வைத்துக் கொண்டு அந்த அணியை விளாசி வருகின்றனர்.
தற்போது முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததை பற்றி கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். பள்ளிக்கூட சிறுவர்கள் போல பாகிஸ்தான் வீரர்கள் போட்டியில் ஆடியதாகக் கூறி இருப்பது தான் இதில் உச்சம். என்ன கூறினார் கம்ரான்?
"உலகக்கோப்பையில் நன்றாக செயல்பட வேண்டும் என்றால், ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால், இப்படி ஒரு அணுகுமுறையை நீங்கள் வைத்துக் கொண்டு எப்படி முடியும்? நெதர்லாந்து அணியைக் கூட உங்களால் வீழ்த்த முடியாது. அணி நிர்வாகம் என்ன செய்து கொண்டு இருக்கிறது? உங்களை யார் முதலில் பந்து வீசச் சொன்னது? குறைந்த பட்சம் வீரர்களை கிரீஸில் நின்று பேட்டிங் ஆட சொல்லி இருக்க வேண்டும். உங்கள் ரன் ரேட் படுமோசமாக உள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக 190 ரன்களை 40 ஓவர்களில் சேஸ் செய்கிறீர்கள்." என விளாசித் தள்ளினார் கம்ரான்.
அத்துடன், "அவர்களுக்கு மெசேஜ் அனுப்புங்கள். ஷதாப், இப்திகார், சல்மான் அவுட் ஆன விதம் பற்றி கேளுங்கள். முழு ஓவர்களும் ஆட வேண்டும் என கூறுங்கள். குறைந்த பட்சம் 260 - 280 ரன்களாவது எடுக்க வேண்டும் என கூறுங்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கேள்வி கேட்காது என நன்றாக தெரியும். அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை. எந்த அணுகுமுறையும் இல்லை. எல்லோரும் விடுமுறைக்கு சுற்றிப் பார்ப்பது போல சென்று இருக்கிறார்கள். இதை சொல்ல வெட்கப்படுகிறேன். அவர்கள் ஒரு சிறப்பான அணிக்கு எதிராக பள்ளிக்கூட சிறுவர்கள் போல ஆடி இருக்கிறார்கள்" என கடும் விமர்சனங்களையும் முன் வைத்தார் கம்ரான் அக்மல்.