IND vs PAK: கடைசி 8 பந்தில் வெறியாட்டம் ஆடிய பாகிஸ்தான் வீரர் அஷ்ரஃப்.. கைகொடுத்த துபே
துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் அதிரடியாக ஆடினாலும், இரண்டாவது பாதியில் விக்கெட்டுகளை இழந்ததால் ரன் குவிப்பின் வேகம் குறைந்தது. யாரும் எதிர்பாராத வகையில் சிவம் துபே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய ஃபஹீம் அஷ்ரஃப்-இன் உதவியால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஃபக்கர் ஜமான் அதிரடியாக ஆடினார்கள். ஃபக்கர் ஜமான் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பிடித்த சர்ச்சைக்குரிய கேட்ச்சால் ஆட்டமிழந்தார். அடுத்ததாக மூன்றாம் வரிசையில் களமிறங்கிய சயிம் அயூப், இந்த ஆசியக் கோப்பை தொடரில் இதற்கு முன்பு மூன்று போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் 'டக் அவுட்' ஆகி இருந்ததால், பாகிஸ்தான் ரசிகர்களே பதற்றத்துடன் இருந்தனர். எனினும், ஓரளவு ரன் சேர்த்த சயிம் 17 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.

மறுபுறம் சாஹிப்சாதா ஃபர்ஹான் அதிரடியாக ரன் சேர்த்தார். அவரது ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அணி திணறியது. அந்த சமயத்தில் சிவம் துபேதான் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அவர் வீசிய முதல் ஓவரில் சயிம் அயூப்-இன் விக்கெட்டையும், இரண்டாவது ஓவரில் சாஹிப்சாதா ஃபர்ஹான்-இன் விக்கெட்டையும் வீழ்த்தி இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தார்.
சிறப்பாக ரன் சேர்த்த சாஹிப்சாதா ஃபர்ஹான் 45 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்திருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசி இருந்தார். அதன் பிறகு வந்த ஹுசைன் தலாத் 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முகமது நவாஸ் 19 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.
கடைசி சில ஓவர்களில் சல்மான் ஆகா மற்றும் ஃபஹீம் அஷ்ரஃப் அதிரடியாக ரன் சேர்த்தனர். குறிப்பாக, ஃபஹீம் அஷ்ரஃப் 8 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். அவரே போட்டியின் கடைசி 8 பந்துகளையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அவர் ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்து பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் வேகமாக உயர உதவினார்.
இறுதியாக, பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சிவம் துபே 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 45 ரன்கள் வாரி இறைத்து ஏமாற்றம் அளித்தார்.


Click it and Unblock the Notifications