துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் மோதும் ஆட்டம் இன்னும் தொடங்கப்படாதது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற முடியும். ஆனால் போட்டி நடுவரான ஆண்டி பைகிராப்டை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்கு காரணம் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற போது ஆண்டி பய்கிராஃப்ட் தான் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளத் தேவையில்லை என்று கூறியிருந்தார்.இதனால் ஆண்டி பயகிராப்ட் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

இதனால், தாங்கள் விளையாடும் போட்டியில் அவர் போட்டி நடுவராக இருக்கக் கூடாது என்றும் ஐசிசிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஒருவேளை ஆண்டி பயகிராப்ட் போட்டி நடுவராக தொடர்ந்தால் யுஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானின் கோரிக்கையை ஐசிசி ஏற்றுக் கொண்டதாக காலையில் செய்தி வெளியிடப்பட்டது.
பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்திய ஊடகங்களுக்கு இந்த செய்தியை அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது போட்டி இன்னும் தொடங்கப்படவில்லை. காரணம் பாகிஸ்தான் கோரிக்கையை ஐசிசி இன்னும் ஏற்கவில்லை என்று புது தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் போட்டியிலிருந்து விலக முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடைசி கட்ட முயற்சியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் ஐசிசி நிர்வாகிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போட்டியை ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்குமாறு பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் பாகிஸ்தான் அணி இந்த போட்டியிலிருந்து விலகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.