2025 ஆசிய கோப்பைக்கான இந்திய டி20 அணியில் அதிரடி வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் சேர்க்கப்படாதது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தேர்வுக்குழுவின் இந்த முடிவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
"அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு இதுதான் கதியா? இனி அவர்கள் சுயநலமாக ஆட நினைப்பார்கள்" என்பது போல அஸ்வின் கடுமையாக பேசி இருக்கிறார்.

தனது யூடியூப் வீடியோவில் பேசிய அஸ்வின், ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். "தேர்வு செய்வது என்பது மிகவும் கடினமான வேலைதான், சிலரைக் கழற்றிவிட வேண்டியிருக்கும். ஆனால், ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் விஷயத்தில் நடந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இது நியாயமற்றது" என்று அஸ்வின் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், "யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் மிகவும் அரிதானவர்கள். அவர்கள் தங்களுடைய சொந்த சாதனைகளுக்காக விளையாடாமல், அணிக்காக, அணியின் ஸ்டிரைக் ரேட்டிற்காக விளையாடுவார்கள். இப்படிப்பட்ட வீரர்களை நீங்கள் அணியை விட்டு நீக்கினால், அது அவர்களுக்கு தவறான செய்தியை அனுப்பும்" என்றார்.
இந்த விவகாரத்தின் உச்சகட்டமாக அஸ்வின் பேசிய ஒரு கருத்து, பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. "ஒருவேளை நான் யஷஸ்வி ஜெய்ஸ்வாலாகவோ அல்லது ஸ்ரேயாஸ் ஐயராகவோ இருந்திருந்தால், அடுத்த முறை இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க மாட்டேன். என்னுடைய சராசரியை உயர்த்தவும், அணியில் எனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் எனக்காக விளையாடத் தொடங்குவேன்" என்று அஸ்வின் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அணியின் நலனுக்காக அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்கும் வீரர்களைப் புறக்கணிப்பது, அவர்களை சுயநலமாக விளையாடத் தூண்டும் என்பதே அஸ்வினின் முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது. சுப்மன் கில் சுயநலமாக விளையாடக் கூடியவர் என்ற விமர்சனம் நீண்ட காலமாகவே உள்ளது. அவருக்கு இந்திய அணியின் துணை கேப்டன் பதவியும் அளிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த 2025 ஐபிஎல் தொடரில், ஸ்ரேயாஸ் ஐயர் 604 ரன்கள் குவித்து, பஞ்சாப் கிங்ஸ் அணியை 11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். அதேபோல, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 போட்டிகளில் 559 ரன்களை விளாசினார். மேலும், சர்வதேச டி20 போட்டிகளிலும் ஜெய்ஸ்வால் 164 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டை வைத்துள்ளார்.
இவ்வளவு சிறப்பாக செயல்பட்ட பிறகும், ஜெய்ஸ்வாலுக்கு மாற்று வீரர்கள் பட்டியலில் மட்டுமே இடம் கிடைத்துள்ளது, ஸ்ரேயாஸ் ஐயர் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளார். மாற்று வீரராகக் கூட ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்கவில்லை.
தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் இதுகுறித்து பேசுகையில், "அபிஷேக் சர்மாவால் பந்துவீசவும் முடியும் என்பதால் ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்ரேயாஸ் ஐயரை எந்த வீரருக்குப் பதிலாகச் சேர்ப்பது? இது அவருடைய தவறுமில்லை, எங்களுடைய தவறுமில்லை" என்று கூறியுள்ளார்.
இருப்பினும், அணிக்காக அதிரடியாக விளையாடும் வீரர்களை இப்படிப் புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம் என அஸ்வின் எழுப்பியுள்ள கேள்வி, ரசிகர்களிடையேயும் பெரிய ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த சர்ச்சை இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு முறைகள் குறித்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை சூடுபிடிக்க வைத்துள்ளது.