மரண அடி அடித்த ரிங்கு சிங்.. 8 சிக்ஸ்.. 14 பந்தில் நடந்த சம்பவம்.. ஆசிய கோப்பைக்கு முன் உச்சகட்டம்
லக்னோ: உத்தரப் பிரதேச டி20 லீக் தொடரில் மீரட் மேவரிக்ஸ் அணியின் கேப்டன் ரிங்கு சிங், தனி ஒருவனாக நின்று, நம்ப முடியாத ஒரு சதத்தை அடித்து தனது அணியை வெற்றி பெறச் செய்தார். இந்த அதிரடி ஆட்டம், வரவிருக்கும் ஆசியக் கோப்பை தொடருக்கு முன் தன் ஃபார்மை நிரூபிக்கும் வகையில் அவர் இந்த ஆட்டத்தை ஆடி இருக்கிறார்.
லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கோரக்பூர் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மீரட் மேவரிக்ஸ் அணி, தொடக்கத்திலேயே தடுமாறியது. 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தபோது, கேப்டன் ரிங்கு சிங் களம் புகுந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் தனி ஒருவராக நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
கடைசி 14 பந்துகளில் 51 ரன்கள்!
ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய ரிங்கு சிங், 34 பந்துகளில் 57 ரன்களை எட்டியிருந்தார். அதன் பிறகு தனது ஆட்டத்தின் கியரை மாற்றிய அவர், பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். குறிப்பாக, கடைசி 14 பந்துகளில் 51 ரன்களை விளாசி மைதானத்தை அதிர வைத்தார். மொத்தமாக 48 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவருக்கு அடுத்தபடியாக அணியில் அதிகபட்ச ஸ்கோரே 22 ரன்கள்தான். இதன் மூலம், ரிங்கு சிங்கின் இந்த ஆட்டம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். அவரது இந்த "ஒன் மேன் ஷோ" காரணமாக மீரட் அணி 18.5 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங்கின் இடம் குறித்து விவாதங்கள் நடந்து வரும் நிலையில், இந்த அபாரமான சதம் அடிக்கப்பட்டுள்ளது. மேலும், இது அணி நிர்வாகத்துக்கு ரிங்கு சிங்கை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக ஊடகங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் ரிங்கு சிங்கின் இந்த ஆட்டத்தை கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications