துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் (UAE) போட்டிக்குப் பிறகு, 'குரூப் ஏ' பிரிவிலிருந்து சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறும் இரண்டு அணிகள் எவை என்பது உறுதியாகிவிட்டது. இந்தியாவும், பாகிஸ்தான்னும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், 'குரூப் பி' பிரிவில் மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்தியாவிடம் படுதோல்வி, கைகுலுக்கல் சர்ச்சை, தொடரிலிருந்து விலகுவோம் என்ற மிரட்டல் எனப் பல பரபரப்பான நிகழ்வுகளுக்குப் பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான 'வாழ்வா சாவா' ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 4 புள்ளிகளுடன் 'குரூப் ஏ' பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணி, தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று, 4 புள்ளிகள் மற்றும் மிகச் சிறந்த நெட் ரன் ரேட்டுடன் (+4.793) ஏற்கனவே முதலிடத்தைப் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு கம்பீரமாகத் தகுதி பெற்றுவிட்டது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.

'குரூப் ஏ' பிரிவு தெளிவாகிவிட்ட நிலையில், 'குரூப் பி' பிரிவுதான் தற்போது 2025 ஆசிய கோப்பையின் மையமாக மாறியுள்ளது. இந்தப் பிரிவில், இலங்கை மற்றும் வங்கதேசம் தலா 4 புள்ளிகளுடனும், ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகளுடனும் உள்ளன. இந்தப் பிரிவின் கடைசி போட்டி, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற உள்ளது. இந்தப் போட்டியின் முடிவுதான், இந்த மூன்று அணிகளின் தலையெழுத்தையும் தீர்மானிக்கும். இலங்கை - ஆப்கானிஸ்தான் போட்டியின் முடிவை இரண்டு சூழ்நிலைகளாக பார்க்கலாம்.
சூழ்நிலை 1: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றால், அந்த அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகளுடன் வெளியேறும். அப்போது, 4 புள்ளிகளுடன் இருக்கும் வங்கதேசம், இரண்டாவது அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.
சூழ்நிலை 2: ஆப்கானிஸ்தான் இலங்கையை வீழ்த்தினால், அது புள்ளிப் பட்டியலை மிகவும் சிக்கலாக்கும். ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், அவர்களும் 4 புள்ளிகளைப் பெறுவார்கள். அப்போது, ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளுமே தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். இந்த நிலையில், நெட் ரன் ரேட் (Net Run Rate) அடிப்படையிலேயே முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் தகுதி பெறும்.
நெட் ரன் ரேட் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் (+2.150) மற்றும் இலங்கை (+1.546) ஆகியவை மிகவும் வலுவான நிலையில் உள்ளன. வங்கதேசத்தின் நெட் ரன் ரேட் (-0.270) மைனஸில் இருப்பதால், அவர்களின் வாய்ப்பு மிகவும் குறைவு. இலங்கை அணி மிக மிக மோசமான தோல்வியைச் சந்தித்தால் மட்டுமே வங்கதேசத்திற்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே, ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், அவர்களும் இலங்கையும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறவே அதிக வாய்ப்புள்ளது.
குழு ஏ
1 - இந்தியா - போட்டிகள்: 2, வெற்றி: 2, புள்ளிகள்: 4, நெட் ரன் ரேட்: +4.793
2 - பாகிஸ்தான் - போட்டிகள்: 3, வெற்றி: 2, புள்ளிகள்: 4, நெட் ரன் ரேட்: +1.790
3 - ஐக்கிய அரபு அமீரகம் - போட்டிகள்: 3, வெற்றி: 1, புள்ளிகள்: 2, நெட் ரன் ரேட்: -1.984
4 - ஓமன் - போட்டிகள்: 2, வெற்றி: 0, புள்ளிகள்: 0, நெட் ரன் ரேட்: -3.375
குழு பி
1 - இலங்கை - போட்டிகள்: 2, வெற்றி: 2, புள்ளிகள்: 4, நெட் ரன் ரேட்: +1.546
2 - வங்கதேசம் - போட்டிகள்: 3, வெற்றி: 2, புள்ளிகள்: 4, நெட் ரன் ரேட்: -0.270
3 - ஆப்கானிஸ்தான் - போட்டிகள்: 2, வெற்றி: 1, புள்ளிகள்: 2, நெட் ரன் ரேட்: +2.150
4 - ஹாங்காங் - போட்டிகள்: 3, வெற்றி: 0, புள்ளிகள்: 0, நெட் ரன் ரேட்: -2.151