Asia Cup U19: என்னையா சீண்டுகிறாய்? நோஸ்-கட் கொடுத்த வைபவ் சூர்யவன்ஷி.. ஆசிய கோப்பையில் வெறியாட்டம்
துபாய்: இந்திய அண்டர்-19 அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி களத்தில் ஒரு தரமான சம்பவத்தைச் செய்தார். ஐக்கிய அரபு அமீரக விக்கெட் கீப்பர் தன்னை சீண்டிய போது, வைபவ் கொடுத்த பதில் இணையத்தில் பரவி வருகிறது. துபாயில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைத் தொடரில், இந்தியா மற்றும் யுஏஇ (UAE) அணிகள் மோதின. இதில் இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 95 பந்துகளில் 171 ரன்கள் (14 சிக்ஸர்கள்) விளாசி உலக சாதனை படைத்தார்.
வைபவ் சூர்யவன்ஷி தனது சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். அவர் 90 ரன்களில் இருந்தபோது, அமீரக விக்கெட் கீப்பர் சலே அமின் (Saleh Amin) அவரை நிலைகுலையச் செய்யத் திட்டமிட்டார். ஸ்டம்புக்குப் பின்னால் இருந்து கொண்டு, "கமான் பாய்ஸ்.. 90ஸ் சாபம்.. 90ஸ் சாபம்.." என்று கத்திக்கொண்டே இருந்தார். அதாவது 90 ரன்களில் வைபவ் அவுட் ஆகிவிடுவார் என்று அவருக்குப் பயம் காட்டினார்.

அமீரக விக்கெட் கீப்பர் தொடர்ந்து கத்திக்கொண்டே இருப்பதை கவனித்த வைபவ், சற்றும் பதற்றப்படாமல் அவரைத் திரும்பிப் பார்த்தார். "உன் கூட வேணா ஒரு செல்ஃபி எடுத்துக்கவா?" என்று இந்தியில் நையாண்டியாக கேட்டார். அதாவது, "நீ என்ன பேசினாலும் நான் செஞ்சுரி அடிப்பேன், என் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு என் கூட செல்ஃபி எடுக்க ஆசைப்படுவ" என்பதைச் சூசகமாகச் சொல்லி கீப்பரை வாயடைக்கச் செய்தார்.
வாயால் மட்டும் பதில் சொல்லாமல், செயலிலும் காட்டினார். அடுத்த சில நிமிடங்களில் வெறும் 56 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். சதத்திற்குப் பிறகும் நிற்காத அவர், 171 ரன்கள் வரை குவித்து அணியை இமாலய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார். இந்தியா 433 ரன்கள் குவித்து பின்னர் 234 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.
இளைஞர் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் (171 ரன்களில்) அவர் ஆட்டமிழந்தார். இருப்பினும், தன்னை சீண்டிய கீப்பருக்கு அவர் கொடுத்த அந்த 'செல்ஃபி' பதில், இந்தத் தொடரின் மறக்க முடியாத தருணமாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications