ஆசிய கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டி.. சவுதி அரேபியா அணியில் 19 வயது தமிழக வீரர்
திருச்சி:ஆசிய கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டியில் சவுதி அரேபியா அணியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தமிழக வீரர் தேர்வு பெற்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஏசிசி நடத்தும் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கான அணியை சவூதி கிரிக்கெட் மையம் அறிவித்துள்ளது. அதில் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டினத்தைச் சேர்ந்த முஹமது நயீம் இடம் பெற்றுள்ளார்.

சவூதிஅரேபியாவில், பிறந்து ரியாத்தில் உள்ள பன்னாட்டு இந்தியப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். அவர் தற்சமயம் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் இளங்கலை பயின்று வருகிறார்.
அவர் கடந்த முறை தாய்லாந்தில் நடந்த உலக கோப்பை தகுதிச் சுற்றில் தாய்லாந்து, கத்தார், பூட்டான், ஓமன் ஆகிய நாடுகளுக்கு எதிராக விளையாடியுள்ளார்.

ஐக்கிய அமீரகத்தின் துபாய் பன்னாட்டு விளையாட்டரங்கம், ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கம், அஜ்மன் ஈடன் கார்டன் விளையாட்டரங்கம் ஆகிய இடங்களில் நடைபெறும் போட்டிகளில் குரூப் A வில் சவூதிஅரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் ஆகிய நாடுகளும் குரூப் B யில் ஓமன், கத்தார், மாலத்தீவு, குவைத் ஆகிய நாடுகளும் விளையாடுகின்றன.

இப்போட்டி எதிர்வரும் ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே 3ம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஜூலையில் நடைபெற உள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவற்றிற்கு எதிராக விளையாட தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications