டெல்லி: ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி, நாளை தேர்வு செய்யப்பட இருக்கிறது. இதில் ஆஸ்திரேலிய தொடரில் இடம் பிடித்த யுவராஜ், ஹர்பஜனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வருகிற 9-ம் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து ஆசியக்கோப்பை பிப்ரவரி 24-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரையும், உலகக்கோப்பையின் முதன்மை லீக் சுற்று மார்ச் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

ஆசியக்கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர் என அடுத்தடுத்து முக்கிய போட்டிகள் வருவதால், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி, நாளை சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வுக்குழு டெல்லியில் கூடி தேர்வு செய்யும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரை 3 - 0 என்ற கணக்கில் இந்தியா வென்று அசத்தியிருப்பதால் அந்த அணியில் இடம் பிடித்த பெரும்பாலன வீரர்கள் இதில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள மூத்த வீரர் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் நெஹ்ரா ஆகியோருக்கு மீண்டும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.