ஹாங்சோ : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முதன் முறையாக பேட்மிண்டனில் தங்கம் வென்றுள்ளது.
இந்தியாவின் முன்னணி வீரர்களான சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆண்கள் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றனர்.

ஆசிய விளையாட்டில் பேட்மிண்டனில் இதுவரை இந்தியா தங்கப் பதக்கம் வென்றதில்லை. அதை உடைத்து இருக்கிறது இந்த ஜோடி. 2018 ஆசிய விளையாட்டில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றதே பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவின் அதிகபட்ச பதக்கம் ஆகும்.
சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, தென்கொரியாவின் சோய் சோல்கியு மற்றும் கிம் வோன்ஹோ ஆகியோரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. சாத்விக் மற்றும் சிராக் ஜோடி 21-18, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டனில் இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த ஜோடி அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக உலக நம்பர் 1 ஜோடியாக மகுடம் சூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டிலும் இந்தியா இன்று தங்கப் பதக்கம் வென்றது. மேலும், ஆசிய விளையாட்டில் முதன்முறையாக இந்தியா 100 பதக்கங்களை தாண்டி உள்ளது.