Asian Games: பைனலில் உலக சாதனை படைத்த ஷபாலி வர்மா.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு
நிஷின்: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டில் மகளிர் கிரிக்கெட் போட்டியின் தங்கப் பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில், இந்திய தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார். ஒரே காலண்டர் வருடத்தில் மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற இமாலய சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டி தொடங்கும் முன், தென்னாப்பிரிக்க நட்சத்திர வீராங்கனை லாரா வோல்வார்ட்டின் 824 ரன்கள் உலக சாதனையை முறியடிக்க ஷபாலிக்கு 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்த நிலையில், இறுதிப் போட்டியில் களமிறங்கிய ஷபாலி, தான் எதிர்கொண்ட 7-வது பந்திலேயே 10-வது ரன்னை எட்டி இந்த வரலாற்று மைல்கல்லைத் தொட்டார். இதன் மூலம் 2026-ம் ஆண்டில் தனது 24-வது போட்டியில் விளையாடி வரும் அவரது மொத்த ரன் எண்ணிக்கை 825 ஆக உயர்ந்தது.

2026-ம் ஆண்டில் ஷபாலி வர்மா உச்சகட்ட ஃபார்மில் விளையாடி வருகிறார். இந்த ஒரே ஆண்டில் மட்டும் அவர் 7 அரைசதங்கள் மற்றும் 1 சதத்தை விளாசியுள்ளார். காலிறுதியில் ஜப்பானுக்கு எதிராக 15 பந்துகளில் 40 ரன்களும், அரையிறுதியில் வங்கதேசத்திற்கு எதிராக 49 பந்துகளில் 100 ரன்களும் விளாசி எதிரணிகளை மிரட்டினார்.
மகளிர் சர்வதேச டி20 வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் ஷபாலி வர்மா 825 ரன்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். லாரா வோல்வார்ட் 824 ரன்களுடன் 2-வது இடத்திலும், ஹாங்காங்கின் நடாஷா மைல்ஸ் 800 ரன்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இந்தப் போட்டியில் அபாரமாக ஆடிய ஷபாலி வர்மா 29 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அரைசதம் அடிக்கும் வாய்ப்பை 2 ரன்களில் நழுவ விட்டார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 11,000 ரன்களைக் கடந்து வரலாற்று மைல்கல்லை எட்டினார். அவர் அரைசதம் அடித்து தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
இந்திய இளம் வீராங்கனை ஷபாலி வர்மாவின் இந்த உலக சாதனை, ஆசிய விளையாட்டு தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இந்திய ரசிகர்களுக்கு இரட்டிப்பு உற்சாகத்தை அளித்தது.


Click it and Unblock the Notifications

