ஆசிய போட்டி 2026: உங்களுக்கு வசதி வேண்டுமா? நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.. பிசிசிஐக்கு ஜப்பான் பதில்
டோக்கியோ: ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தங்குமிடம் மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்த கவலைகளுக்கு ஜப்பான் கிரிக்கெட் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நவோகி அலெக்ஸ் மியாஜி விளக்கம் அளித்துள்ளார். பங்கேற்கும் அணிகளுக்கு ஹோட்டல் தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரும்பினால் சொந்தமாக ஏற்பாடுகளைச் செய்ய சுதந்திரம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் ஐச்சி மாகாணத்தில் உள்ள நிஷின் நகரில் உள்ள கொரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் தங்குமிடம் அமைந்துள்ளதால், அண்மையில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில்கூட்டத்தில் முன்னணி நாடுகள் கவலை தெரிவித்தன. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்குகின்றன.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் ஜேசிஏ குறைந்த அளவிலே பங்கையே கொண்டுள்ளது என்று மியாஜி வலியுறுத்தினார். "ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் கீழ், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன்இணைந்து ஐச்சி-நகோயா விளையாட்டு ஏற்பாட்டுக் குழுஇந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது" என்று மியாஜி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
"ஜேசிஏ சில பகுதிகளில் ஆதரவை வழங்கியுள்ளது, ஆனால் நேரடியாக இதில் ஈடுபடவில்லை. எனினும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து தரப்பினரும் கடுமையாக உழைத்து வருகின்றனர் என்பதை என்னால் கூற முடியும். ஏசிசி மற்றும் ஐநாகோக் ஆகியவை நீண்ட காலமாக தங்குமிட விருப்பங்கள் குறித்து விவாதித்து வருகின்றன. கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணிகளுக்கு ஹோட்டல் தங்குமிடம் வழங்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.
"மற்ற பல விளையாட்டுகளுக்கு கப்பல் அல்லது கொள்கலன் ஹோட்டல்கள் போன்ற மிகவும் குறைந்த வசதிகளே வழங்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் அணிகள் விரும்பினால் தங்களுக்கு சொந்தமாக தங்குமிடங்களை ஏற்பாடு செய்து கொள்ளலாம், வீரர்கள் பகுதியிலேயே கழிவறை வசதிகள் கிடைக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மைதானத்தில் தற்காலிக மற்றும் நிரந்தர வசதிகள் இரண்டும் உள்ளன. மைதானத்தில் உள்ள வசதிகள் தற்காலிகமானவை என்றாலும், குறுகிய காலக்கெடுவுக்குள் சிறந்த வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய ஐநாகோக் மற்றும் ஏசிசி ஆகியவை இணைந்து பணியாற்றியுள்ளன" என்று மியாஜி கூறினார்.
வீரர்களுக்காக தயார் செய்யப்பட்டு வரும் தற்காலிக உடை மாற்றும் அறைகள் குறித்த கவலைகளுக்கும் அவர் பதிலளித்தார். "தற்காலிகமாக இருந்தாலும், இந்த வசதிகள் வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முடிந்தவரை வசதியான இடத்தை வழங்கும். மைதானத்தைச் சுற்றி நிரந்தர வசதிகளும் உள்ளன, அவற்றை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்," என்றார்.
ஐச்சி மாகாணத்தில் முறையான கிரிக்கெட் மைதானம் இல்லாததால், இந்த மைதானத்தை புதிதாக உருவாக்க ஏற்பாட்டாளர்களுக்கு 17 மாதங்கள் மட்டுமே அவகாசம் இருந்தது என்று மியாஜி விளக்கினார். "ஐச்சி மாகாணத்தில் தரமான கிரிக்கெட் மைதானங்கள் இல்லாததால், அவர்கள் புதிதாக மைதானத்தை உருவாக்க வேண்டியிருந்தது. வெறும் 17 மாதங்கள் மட்டுமே இருந்த நிலையில், கிடைக்கும் நேரம் மற்றும் வளங்களைக் கருத்தில் கொண்டு, விளையாடுவதற்கான வசதிகள் சிறப்பாக இருப்பதை ஐநாகோக் மற்றும் ஏசிசி இணைந்து உறுதி செய்துள்ளன," என்றார்.
"இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உதவியுடன் சிறந்த கியூரேட்டர்களால் தயாரிக்கப்பட்ட புல் மற்றும் ஹைப்ரிட் பிட்ச்களுடன் கூடிய முழு அளவிலான மைதானமாக இது இருக்கும். ஆசிய விளையாட்டு வரலாற்றிலேயே சிறந்த விளையாட்டு மைதானமாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று மியாஜி கூறினார்.


Click it and Unblock the Notifications

