பேட், பந்தை தொடாமல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பைனல் போக வாய்ப்பு.. ஆசிய விளையாட்டில் விசித்திரம்
நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கிரிக்கெட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 4 காலிறுதிப் போட்டிகளும் ஒரு பந்து கூட வீசப்படாமல் அடுத்தடுத்து ரத்தாகியுள்ளன. இதையடுத்து சர்வதேச டி20 தரவரிசை அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி நாட்களிலும் மழை அச்சுறுத்தல் நீடிப்பதால், ஒரு பந்து கூட விளையாடாமல் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்லும் விசித்திரமான சூழல் உருவாகியுள்ளது.
ஜப்பானின் நகோயா மற்றும் நிஷின் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருந்தன. ஆனால், இந்த இரண்டு இடங்களிலும் கடந்த சில நாட்களாக விடாது பெய்து வரும் அடைமழை காரணமாக, காலிறுதி ஆட்டங்களில் டாஸ் கூட போட முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக ஐசிசி தரவரிசை அடிப்படையில் முதல் காலிறுதியில் ஹாங்காங்கை வீழ்த்தி பாகிஸ்தானும், 2வது காலிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியாவும், 3வது காலிறுதியில் நேபாளத்தை வீழ்த்தி இலங்கை
யும், 4வது காலிறுதியில் மலேசியாவை வீழ்த்தி வங்கதேசமும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா இலங்கையுடனும், பாகிஸ்தான் வங்கதேசத்துடனும் மோத உள்ளன.
அரையிறுதியிலும் கொட்டப்போகும் மழை
அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ள வியாழக்கிழமையன்று நகோயாவில் மழை பெய்வதற்கு 60 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அரையிறுதி ஆட்டங்களும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டால், விதிமுறைகளின்படி தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் நேராக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். இதனால் களத்தில் பேட்டையோ பந்தையோ தொடாமல் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் விநோதம் நிகழும்.
இறுதிப்போட்டியிலும் மழையா? விதிகளில் புதிய மாற்றம்
அக்டோபர் 3 அன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டி நாளிலும் 40 சதவீதம் மழைக்கான வாய்ப்பு உள்ளது. கடந்த 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்ட போது, சிறந்த தரவரிசை அடிப்படையில் இந்திய அணிக்கு மட்டுமே தங்கம் வழங்கப்பட்டது.
ஆனால் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இறுதிப்போட்டி மழையால் முழுமையாக கைவிடப்பட்டால், இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு தங்கப் பதக்கம் பகிர்ந்தளிக்கப்படும்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் பதற்றம் காரணமாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்து வரும் நிலையில், இறுதிப்போட்டி மழையால் ரத்தாகி இரு அணிகளும் ஒரே மேடையில் ஏறி தங்கப் பதக்கத்தை பகிர்ந்து கொள்ளும் சூழல் ஏற்படுமா என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications

